கோத்தகிரி- அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி உயிரிழப்பு

Spread the love

கோத்தகிரி: கோத்தகிரி அருகே சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புலிக்குட்டி ஒன்று உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி வனக்கோட்டம் கோத்தகிரி வனச்சரக எல்லைக்குட்பட்டதும், ஜக்கனாரை கிராமம், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், மாமரம் என்ற பகுதிக்கு அருகில், சாலையின் நடுவே, நேற்று இரவு 9.15 மணியளவில், புலிக்குட்டியின் உடல் அடையாளம் தெரியாத வாகன மோதி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், கோத்தகிரி வனத்துறையினர், சம்பவ இடத்தை தணிக்கை செய்து, ஆண் புலிக்குட்டியின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் அப்பகுதி முழுவதும் தணிக்கை செய்தும், காவல்துறை, வனத்துறை சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப் பட்டது. பின்னர் நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து இன்று காலை 10:30 மணியளவில், கோத்தகிரி வனச்சரகம், லாங்க் வுட் வன ஓய்வு விடுதிக்கு அருகில், முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் டாக்டர் ராஜேஷ்குமார் மற்றும் கக்குச்சி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ரேவதி ஆகியோர், நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர், வன ஆர்வலர்கள், கோத்தகிரி வனச்சரக அலுவலர் மற்றும் பணியாளர்கள், வனக்குழு தலைவர் ஆகியோர் முன்னிலையில், உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

இறந்த ஆண் புலிக்குட்டியின் வயது சுமார் ஐந்து மாதங்கள் இருக்கும் என்றும், புலிக்குட்டியின் விலா எலும்புகள் உடைந்துள்ளதும், உடற்கூறாய்வில் தெரிய வந்ததாக வனக் கால்நடை உதவி மருத்துவர் தெரிவித்தார். மேலும் உடற்கூறு ஆய்வில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. உடற்கூறாய்வின் இறுதியில் ஆண் புலிக்குட்டியின் உடல் அப்பகுதியிலேயே எறியூட்டப்பட்டது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours