தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நடத்திய திடீர் போராட்டத்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், புதூர் பாண்டியாபுரத்தில் சுங்கச்சாவடி உள்ளது. தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இந்த சுங்கச்சாவடியை, மதுக்கான் என்ற தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறது.
இந்த சுங்கச்சாவடி மாநகராட்சி எல்லையை தாண்டி 15 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை மீறி இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சுங்கச்சாவடியில் அனைத்து கவுன்டர்களும் செயல்படாமல், ஊழியர் பற்றாக்குறை காரணமாக இரண்டு கவுன்டர்கள் மற்றும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும் வாகன ஓட்டிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் உள்ளது. சுங்கச்சாவடிக்கு வரும் தூத்துக்குடியைச் சேர்ந்த லாரிகளுக்கு 24 மணி நேரத்திற்கு ஒரு கட்டணம் என்று இல்லாமல், இரண்டு முறை கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பலமுறை லாரி உரிமையாளர்கள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சுங்கச்சாவடி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென தூத்துக்குடி லாரி உரிமையாளர் சங்கத்தினர் மற்றும் லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசன் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சுங்கச்சாவடி நிர்வாகிகளுடன் அவர்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக சுங்கச்சாவடி வழியாக செல்வதற்காக வந்த வாகனங்கள் செல்ல முடியாமல் பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் இரு தரப்பினர் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக சுங்கச்சாவடி நிர்வாகம் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். இதனிடையே நீண்ட நேரமாக காத்திருந்த வாகன ஓட்டிகள் பின்னர் இலவசமாக இந்த சுங்கச்சாவடி வழியாக தங்கள் பயணத்தை மேற்கொண்டனர்.
+ There are no comments
Add yours