கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு இறுதியில் தமிழக முதல்-அமைச்சர் முகஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
சர்ச்சைகள்
தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை இந்த பேருந்து முனையம் சந்தித்து வருகிறது. முழுமையாக பேருந்து நிலையத்தின் பணிகளை (இணைப்பு வசதிகள்) ஆகியவற்றை முடிக்காமல் திறக்கப்பட்டதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னை டூ திருச்சி
இந்நிலையில் சென்னையில் இருந்து திருச்சிக்கு பேருந்து வசதிகள் இல்லை என நேற்று பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூறி அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு இருக்க மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்தால் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது என்று போக்குவரத்துத்துறை விளக்கம் அளித்தது.
சரமாரியாக கேள்வி
இந்நிலையில் இன்று காலையும் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், பாண்டிச்சேரி, சிதம்பரம், நெய்வேலி, திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லை என புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக விழுப்புரம் மண்டல நேரக்காப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பயணிகள் சரமாரியாக கேள்வி எழுப்பியதால், நேரக்காப்பாளர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
மக்கள் மீண்டும் போராட்டம்
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டம் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்றும் 150க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போதிய அளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகின்றனர் இதற்கு காரணம் என்னவென்று தெரியாமல் மக்கள் அனைவரும் குழம்பி போய் உள்ளனர்.
இந்நிலையில் இது தொடர்பாக கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நள்ளிரவு நேரம் பேருந்துகள் இல்லை என்ற குற்றச்சாட்டு நள்ளிரவு நேரத்தில்தான் எழுந்துள்ளது. காலை, மாலை போன்ற நேரத்தில் பிரச்னை இல்லை. நேற்று முன்தினம் இரவு 133 பேருந்துகள் திருச்சிக்கு சென்றன. அதிகப்படியான பயணிகள் வருகையால் 130 கூடுதல் பேருந்துகளும் இங்கிருந்து அனுப்பப்பட்டன.
அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையம் மீண்டும் இயங்குவது போன்ற தோற்றத்தை சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் செய்து வருகின்றனர். முடிச்சூர் பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
+ There are no comments
Add yours