மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளுக்கு போட்டியிடும் நோக்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தனித்து போட்டியிடும் சுயேச்சைகள் என சுமார் 1,400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இது குறித்த தகவல் தேர்தல் ஆணையத்தின் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. ஆரம்ப நாட்களில் மனு தாக்கல் மந்தமாக இருந்தது. சில சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் வேட்பாளர்கள் சிலர் தங்களது தனித்துவ செயலால் கவனம் ஈர்த்தனர்.
இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை (மார்ச் 25) பங்குனி உத்திரம் நல்ல நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதனால், வேட்பாளர்கள், கட்சியினர் வருகையால் தேர்தல் அலுவலகங்கள் களைகட்டின. 39 தொகுதிகளிலும் மனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்தது.
தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி, வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (மார்ச் 27) கடைசி நாள் என்பதால் அதிக அளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் 1,400-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி தொகுதியில் சுமார் 45 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை செய்யும் பணி நாளை (மார்ச் 28) நடைபெறுகிறது.
+ There are no comments
Add yours