நாகை: நீண்ட இழுபறிக்குப் பின்னர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கியது.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆனால், பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால், தொடங்கிய இரண்டாவது நாளே கப்பல் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டு வாரத்துக்கு மூன்று நாட்கள் என மாற்றப்பட்டது. அதன்படி வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்களில் மட்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்குப் பிறகும் பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனையடுத்து கனமழையால் இந்த பயணிகள் கப்பல் சேவை கடந்த ஆண்டு அக்டோபர் 20-ம் தேதியுடன் நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் கடந்த சில மாதங்களாக மீண்டும் நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்தை தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் சிவகங்கை என்ற பெயர் கொண்ட கப்பல் சேவை இன்று நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து தொடங்கப்பட்டது. பயணிகள் கப்பலை புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம், நாகை ஆட்சியர் ஆகாஷ் தொடங்கி வைத்தனர். நாகையில் இருந்து மொத்தம் 150 பேர் செல்லக்கூடிய யணிகள் கப்பலில் இன்று 44 பேர் பயணித்தனர். இந்த கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு செல்லும். நாளை காலை காங்கேசன் துறையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 2 மணிக்கு வரும். அதன்பிறகு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் நாள்தோறும் நாகப்பட்டினத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் சிவகங்கை கப்பல் பகல் 12 மணிக்கு இலங்கையை சென்றடையும். பின்னர் அதேநாள், மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகை துறைமுகத்திற்கு கப்பல் வந்தடையும்.
இந்தக் கப்பலில் 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளது. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ரூ.7,500, சாதா இருக்கைக்கு ரூ.5000 ஜிஎஸ்டியுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.
முழுவதும் குளிர்சாதன வசதி, தொலைக்காட்சி உள்ளிட்ட வசதிகள் கப்பலில் உள்ளன. சாம்பார் சாதம், தயிர் சாதம் தொடங்கி நூடுல்ஸ் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அனைத்து பயணிகளுக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours