மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .
இந்நிலையில் தமிழக முதல்வர் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறிருப்பத்து உண்மை தான் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின். ஆமாம். குறிப்பிட்டுள்ளது உண்மை தான். ஆனால், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள்/முறைகேடுகள் அனைத்தும் மாநில அரசுகளை நோக்கி தான் சொல்லப்பட்டுள்ளன என்பதை நீங்கள் சொல்ல தவறி விட்டீர்களே முதல்வர் அவர்களே?
தமிழகத்தில் இந்த திட்டத்தில் பின் வரும் குறைகள் அல்லது ‘உங்கள் மொழியில்’ முறைகேடுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
தமிழகத்தில் ஒரே அல்லது தவறான ஆதார் எண்கள், குறிப்பாக 7 எண்களில் மட்டும் 4761 காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. பயனாளிகள் குறித்த தரவுகளை தமிழக அரசே தன் தகவல் தொழில்நுட்ப தரவுகளின் அடிப்படையிலேயே வடிவமைத்து, இயக்குவதால் இந்த முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்றும், இதை தடுக்க இனி தேசிய சுகாதார ஆணையத்தின் தரவுகளின் அடிப்படையில் இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. (சி ஏ ஜி அறிக்கை 11/2023, பக்கம் 18)
தமிழ்நாட்டில் 1,07,040 ஓய்வூதியம் பெறுபவர்கள் (இவர்களுக்கு இந்த திட்டத்தில் இடமில்லை) இந்த திட்டத்தில் பயன் பெற்றுள்ளார்கள் என்றும் அவர்களுக்காக காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாநில சுகாதார ஆணையத்தால் அளிக்கப்பட்ட தொகை ரூபாய்.22.44 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தமிழக சுகாதார ஆணையத்தால் 57 மருத்துவமனைகளுக்கு இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.(பக்கம் எண் 34)
தமிழ்நாட்டில்,அதிகார பூர்வமாக தரவுகளில் இல்லாத பயனாளிகளுக்கு 5990 எண்களின் மூலம் 18.53 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது .
அரசு ஓய்வூதியம் பெரும் அரசு ஊழியர்கள் 3310 பேருக்கு சிகிச்சை அளித்ததின் பேரில் 14.84 கோடி ரூபாய், மாநில சுகாதார ஆணையத்தால் மருத்துவமனைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 15 பேருக்கு இரு முறை காப்பீடு வழங்கப்பட்ட வகையில் ரூபாய் 61லட்சம் அளிக்கப்பட்டுள்ளது.(பக்கம் எண் 37)
காப்பீடு வழங்குவதில் 170 விண்ணப்பங்களுக்கு 300 நாட்களுக்கும் மேலாகியுள்ளது.(பக்கம் எண்.43)
11,779 கோப்புகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே குணமாகி விடுவிக்கப்பட்டதாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.(பக்கம் எண்.47)
ஒரே நபர் பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.(பக்கம் எண்.52)
இது போன்ற பல்வேறு முறைகேடுகள் அல்லது குறைபாடுகளை அனைத்து மாநிலங்களிலும் சுட்டி காட்டியுள்ளது சி ஏ ஜி அறிக்கை. சுமார் 12 கோடி ஏழை குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு என்பது சாதாரண விஷயமல்ல.
உலகத்திலேயே, சுகாதார காப்பீட்டில் இந்தியாவின் இந்த திட்டம் தான் சிறந்தது என்பதை புரிந்து கொண்டு, இதே அறிக்கையில் (பக்கம் எண். 88,89) மாநில அரசுகளுக்கு, மாநில சுகாதார ஆணையங்களுக்கு அளித்துள்ள பரிந்துரைகளை பின்பற்ற அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதார துறைக்கு உத்தரவிடுவீர்களா முதல்வர் அவர்களே?
இனியாவது ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற இந்த காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை மத்திய பாஜக அரசின் முறைகேடுகள் என்று கூறாமல் நீங்கள் சுட்டிக் காட்டிய சி ஏ ஜி அறிக்கையினை முழுமையாக படித்து, அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, சரி செய்து இனி எந்த முறைகேடுகளோ, குறைபாடுகளோ இல்லாத திட்டத்தை செயல்படுத்தும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் அமைய உத்தரவிடுவீர்களா முதல்வரே? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
+ There are no comments
Add yours