பாஜக ஆட்சியில் தான் அதிக அளவிலான எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக ஒரு செய்தி தாள் குறிப்பை பதிவிட்டு மதுரை, கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாஜக ஆட்சி காலத்தில் எம்பிக்களின் இடைநீக்கம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது என அதில் குறிப்பிட்டுளளார்.
அவர் பதிவிட்டுள்ள செய்தித்தாள் குறிப்பில், சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பாஜக எம்பி ரமேஷ் பிதுரி , பகுஜன் சமாஜ்வாடி எம்பி டேனிஷ் அலியை கடுமையாக விமர்சித்தார். ஆனால் அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி அவர் பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்கினார்.
ஆனால், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மணிப்பூர் விவகாரம் குறித்து வாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, நாடாளுமன்ற சபை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக நடந்துகொண்டதாக கூறி அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இதுவரை 144 இடைநீக்கங்கள் நடைபெற்றுள்ளன. அதே போல, ஒட்டுமொத்தமாக அதிக எண்ணிக்கையில் எம்பிக்கள் சஸ்பெண்ட் என்பதும் பாஜக ஆட்சியில் தான் நடைபெற்றுள்ளன. 2014இல் 49 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதில் அதிகபட்சமாக சஸ்பென்ஸ்ட் செய்யப்பட்டது அதிமுக எம்பிக்கள் மற்றும் தெலுங்கு தேசம் எம்பிக்கள் ஆவர். இதில் பாஜக உறுப்பினர்கள் யாரும் இல்லை.
மாநிலங்களவையில், கடந்த 2006 முதல் 2023 க்கு இடையில் 55 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதில், 2010 வரையில் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர் . அதன் பிறகு 48 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியை சேர்த்தவர்கள்.
இந்த செய்தி குறிப்பை குறிப்பிட்டு, பாஜக ஆட்சியில் எம்பிக்கள் இடை நீக்கம் இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சிகளின் கேள்விக்கு ஒரு முறை கூட பிரதமர் பதில் சொன்னதில்லை. அதாவது, கேள்வி கேட்பவர்களை வெளியேற்றபடுவர்கள், பதில்களை தர மாட்டோம் என்பது தான் பாஜகவின் நிலைப்பாடு என்றும், இன்று நாடாளுமன்றத்தில் நடப்பதே நாளை நாடெங்கும் நடக்கும் என மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் (டிவிட்டர்) சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours