சென்னை: தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சுதந்திர தின விழாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் தேசியக் கொடியை ஏற்றுவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக சார்பில் சுதந்திர தின விழா சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பேசியதாவது:
இன்று உலகத்தின் பொருளாதார உற்பத்தியில் இந்தியாவின் கையில் 3.3 சதவீதம்தான் இருக்கிறது. இதை மாற்றுவதற்கான முயற்சியில் பிரதமர்மோடி ஈடுபட்டுள்ளார். அந்தவகையில் 2047-ல் 60 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்த பெரிய நாடாக இந்தியா மாறுவதற்கு ஒரு பாதையை பிரதமர் மோடி நம் கண் முன்னே காட்டியிருக்கிறார்.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். அவ்வாறு இருக்கும் போதுதான் நாட்டின் வளர்ச்சி இன்னும் வேகமாக அதிகரிக்கும் என கூறியுள்ளார். இளைஞர்கள் இன்று மிகப்பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். தமிழகமும் அந்த மாற்றத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு இழந்த அந்தஸ்தை திரும்பப் பெற வேண்டும். வளர்ச்சி பாதையில் மீண்டும் தமிழகம் செல்ல வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். 2026-ல் தேசியஜனநாயகக் கூட்டணி (என்டிஏ)முதல்வர் அரசு சார்பாக தமிழகத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மக்கள் வாய்ப்பளிக்கத் தயாராக இருக்கிறார்கள். அதற்குபாஜகவினர் கடுமையாக உழைக்க வேண்டும்.
அதன்மூலம், 2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிஆட்சி அமைய வைக்க வேண்டும். வளர்ந்த தமிழகம் வந்தால்தான் வளர்ந்த பாரதம் வரும். வளர்ந்த தமிழகம் வர வேண்டும் என்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி இருக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
+ There are no comments
Add yours