சென்னை: சென்னையில் இன்று (அக்.16) அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடக்கலாம் என்றாலும்கூட அதன் காற்றுக் குவிப்பு மேல் நோக்கி நகர்ந்ததால் சென்னைக்கு இன்று (அக்.16) அதி கனமழை பெய்ய வாய்ப்பில்லை. இது சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி; சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ளலாம். இருப்பினும், இயல்பான அளவில் வடகிழக்கு பருவமழை பெய்யலாம்.
காற்றுக் குவிப்பு ஆந்திராவின் தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதனால் மழை மேக ஈர்ப்பால் நிகழும் மழை மட்டுமே சென்னையில் 18 முதல் 20 ஆம் தேதி வரை பெய்யக்கூடும். ஆகையால் வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களை மக்கள் வீட்டுக்குக் கொண்டு வரலாம். கடந்த இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூரில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சென்னையில் சில இடங்களில் 30 செ.மீ அளவு மழை பெய்துள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இன்று தென் தமிழக மாவட்டங்கள், வட மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் எனப் பரவலாகவே மழைப் பொழிவு குறைவாகவே இருக்கும் என்றும் அவர் தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதி கனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆர்வலர்கள் கணித்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கு பகுதியில் 350 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. பிற்பகலில் சென்னையில் தரைக்காற்று சற்று பலமாக வீசும் என்றும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி வரை மிதமான மழையே பெய்யக்கூடும் என்று கணித்துள்ளனர்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு தொடங்கி கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் வரதராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவிக்கின்றனர். ஒருநாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் தலைநகர் சென்னை மிதக்க தொடங்கி உள்ளது. சென்னையில் பட்டாளம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளி, கல்லூரிக்கு இன்று விடுமுறை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கு இன்று (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளதாக பதிவாளர் அல்லி தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 7 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours