தமிழக சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை- அமைச்சர் சாமிநாதன் தகவல்

Spread the love

திருப்பூர்: “கேரள சினிமா துறையில் நடந்தது போல், தமிழ்நாடு சினிமா துறையில் பாலியல் தொடர்பான புகார்கள் எதுவும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில், தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இன்று (ஆக. 29) துவங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் 7 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்களை துவங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசியது: “கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராம மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரித்திடவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சையை கால்நடைகளுக்கு அளிக்கவும், 2-ம் வெண்மை புரட்சியை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் சமீபத்தில் துவங்கி வைக்கப்பட்டது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திற்கு 7 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் தற்போது வழங்கப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவ வாகனங்களில் ஒரு கால்நடை மருத்துவர், ஒரு கால்நடை உதவியாளர், ஒரு ஓட்டுநர் பணியில் இருப்பர். இந்த வாகனங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை, தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமங்களில் பணியில் இருக்கும். பசுக்கள் மற்றும் எருமைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல், ஆடு மற்றும் கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, கால்நடைகளுக்கு தடுப்பூசி ஆய்வு, சினை பிடிக்காத மாடுகளுக்கு சிகிச்சைகள் போன்றவை மேற்கொள்ளப்படும்.

நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளானது காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ள வழி தடங்களுக்கு சென்று கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகள் மேற்கொள்ளும். மேலும் அவசர காலங்களில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை, 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அழைப்புகளை ஏற்று, கால்நடைகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும். எனவே இச்சேவையை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முன்னாள் அதிமுக அமைச்சர் உதயகுமார், தினந்தோறும் செய்தியில் வரவேண்டும் என்பதற்காக ரஜினி – துரைமுருகன் விஷயத்தை பேசி வருகிறார். அவரது பேச்சு ஒரு காலம் எடுபடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, எந்த ஒரு தொழிற்சாலையும் வெளி மாநிலத்துக்கு செல்லவில்லை. வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து கூட தமிழ்நாட்டுக்கு வந்து தொழில் செய்யும் நிலை உருவாகி இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை அமல்படுத்தியது மூலம், தொழில் தொடங்க ஆர்வமுடன் வெளி மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர்.

கேரளாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தற்போது பரபரப்பாகி உள்ளது. தமிழகத்தில் தற்போது வரை அது போன்று எந்தவித புகார்களும் வரவில்லை. அவ்வாறு வரும் பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார். இதில் வருவாய் அலுவலர் கார்த்திகேயன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி, திருப்பூர் மாநகராட்சி 4- மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) புகழேந்தி, துணை இயக்குநர் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours