மதுரை: கிராமங்களில் தீபாவளி விளையாட்டு போட்டிகளில் யாரையும் புறக்கணிக்காமல், அனைத்து தரப்பினரையும் சேர்த்து நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போலீஸார் அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை குண்டேந்தல்பட்டியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘குண்டேந்தல்பட்டி கிராமத்தில் தீபாவளியையொட்டி அக். 31 முதல் நவ. 2 வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டியை நடத்தும் வல்சார் கூட்டத்துக்கு பங்காளிகள் நாங்கள் வெளியூரில் இருந்து வந்ததாகக் கூறி எங்களிடம் வரி வசூல் செய்யாமல் புறக்கணிக்கின்றனர்.
ஏற்கெனவே கோயிலில் சாமி கும்பிடுவதிலும் எங்களை புறக்கணித்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனைவரும் சாமி கும்பிட உத்தரவு பெறப்பட்டது. கிராமங்களில் தீபாவளி விளையாட்டுப் போட்டிகள் அனைத்து மக்களும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட வேண்டும். ஆனால், இந்தாண்டு விளையாட்டுப் போட்டிகளில், எங்கள் தரப்பினரிடம் பணம் வசூல் செய்யாமலும், விளையாட்டு போட்டியில் எங்கள் குழந்தைகளை பங்கேற்க விடாமலும் புறக்கணிப்பு செய்கின்றனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர், திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே தீபாவளி விளையாட்டுப் போட்டிக்கு எங்களிடம் வரி வசூலிக்கவும், எங்களை விளையாட்டில் பங்கேற்கவும் உத்தரவிட வேண்டும்’ எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று (அக்.28) விசாரித்த நீதிபதி முரளி சங்கர், “தீபாவளி விளையாட்டுப் போட்டிகளில் இதுபோன்று ஒரு பிரிவினரை சமூகப் புறக்கணிப்பு செய்வது ஏற்கத்தக்கது அல்ல. அவர்களையும் இணைத்து நடத்துவதில் என்ன பிரச்சினை? பண்டிகை காலங்களில் ஒரு தரப்பை புறக்கணிப்பு செய்து விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதை ஏற்க முடியாது. எனவே, மனுதாரர் தரப்பில் உரிய பங்களிப்பு தொகை பெற்று இரு தரப்பினரும் சேர்ந்து விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் போட்டி நடத்த போலீஸார் அனுமதி வழங்கக் கூடாது” என உத்தரவிட்டார்.
+ There are no comments
Add yours