கோவை: “திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழாது. எழுவதற்கு வாய்ப்பும் இல்லை. ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்து தொடர்பாக கட்சியின் மூத்த தோழர்களுடன் கலந்து பேசித்தான் முடிவெடுப்போம்.” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்.25) கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே எந்தச் சலசலப்பும் இல்லை. எந்த விரிசலும் இல்லை. அப்படி விரிசல் உருவாவதற்கு வாய்ப்பும் இல்லை.
என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவான ஒரு சிறிய வீடியோவில் இருந்த ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற கருத்தை பலரும் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டனர். அந்த விவாதம் மேலும் மேலும் விவாதங்களுக்கு இடமளித்து விட்டது. அதனால் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையில் எந்தச் சிக்கலும் எழுதாது; எழுவதற்கு வாய்ப்பும் இல்லை.
ஆதவ் அர்ஜூனா பேசிய கருத்து தொடர்பாக கட்சியில் உள்ள மூத்த தோழர்களோடு உட்கட்சி விவகாரங்களை கலந்து பேசித்தான் எந்த முடிவையும் எடுப்போம். உட்கட்சி விவகாரங்களைப் பொறுத்தவரை முன்னணி பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள் என உயர்நிலை குழுவில் இடம்பெற்றுள்ள தோழர்களோடு தொலைபேசி வாயிலாக பேசி உள்ளேன். மீண்டும் நாங்கள் கலந்துபேசி அதுதொடர்பான முடிவுகளை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுகவுடனான கூட்டணி குறித்து தனியார் தொலைக் காட்சிகளுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதில், அமைச்சர் உதயநிதியைக் குறிக்கும் வகையில், ‘சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வர் ஆகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன் துணை முதல்வர் ஆகக் கூடாதா’ என்று பேசியிருந்தார். இது திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
+ There are no comments
Add yours