அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திக்கு வந்த நிலையில், அங்கு அதிமுக நிர்வாகிகள் – விமான நிலைய அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரைக்கு விமானம் மூலம் இன்று காலை வந்தார். இதையொட்டி, கட்சியின் பொதுச்செயலாளரை வரவேற்க, மதுரை மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள ஏராளமான அதிமுக நிர்வாகிகள், மதுரை விமான நிலையத்துக்கு கார்களில் வந்தனர்.
இந்நிலையில் பயணிகள் வெளியே வரும் பகுதியில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வந்த கார் நின்று கொண்டிருந்தது. அப்போது விமான நிலைய அதிகாரிகள் அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறும் இல்லையென்றால் அந்த காரை லாக் செய்துவிடுவதாகவும் கூறியதாக தெரிகிறது.
இதனால் அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளுக்கும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்நிலையில் விமான நிலைய பகுதியில் இருந்த பேரிகார்டுகள் சிலவற்றை அதிமுகவினர் தாங்களாகவே அகற்றியதால் அங்கிருந்த போக்குவரத்து காவலர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. விமான நிலைய அதிகாரிகள், போக்குவரத்து காவலர்கள் என அதிமுக நிர்வாகிகள் அடுத்தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
+ There are no comments
Add yours