கோவையில் மக்களுக்கு வரும் அழைப்புகளால் அவதி !

Spread the love

அலைபேசிகளில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என வரும் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளால், பல்வேறு தரப்பு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்டவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவும் சூழலில், ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என அலைபேசிக்கு வரும் பதிவு செய்யப்பட்ட கணினி அழைப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இதுதொடர்பாக கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “திருப்பூர் மாநகரில் வசித்தாலும், எங்கள் பகுதி கோவை மக்களவை தொகுதிக்கு உட்பட்டது. தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அலைபேசியில் வரும் பதிவு செய்யப்பட்ட அழைப்புகளால் பொது மக்கள் அவதியடைகிறோம். தேர்தலுக்கு மூன்றரை வாரங்களே இருக்கும் நிலையில், கோவை மக்களவை தொகுதியில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என்றும், வேட்பாளர் மற்றும் கட்சியின் பெயரை கூறி யாருக்கு வாக்களிக்க உள்ளீர்கள் என்பது தொடர்பாகவும் கேள்வி கேட்கிறார்கள்.

அழைப்பை ஏற்றவுடன் யார் எங்கிருந்து அழைக்கிறார்கள் என்ற அடிப்படை விவரம்கூட இல்லை. எடுத்தவுடன் மக்களவை தேர்தலில் ‘உங்கள் வாக்கு யாருக்கு’ என்ற கேள்வியுடன்தான் ஆரம்பிக்கிறது. தேர்வு செய்தால், ஒவ்வொரு கட்சி மற்றும் வேட்பாளர் பெயரை கூறி, ஒவ்வொரு எண்ணை அழுத்த சொல்கிறார்கள். யாருக்கும் வாக்களிக்க முடிவு செய்யவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் அதற்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணை அழுத்த சொல்கிறார்கள்.

இந்த அழைப்புகள் யார் மூலமாக வருகிறது என்றுகூட பாமர மக்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இது சர்வே என்றால், இதனை யார் எடுக்கிறார்கள் என்ற அடிப்படை தகவல் இல்லாமல் அழைப்புகள் வருகின்றன. எந்த எண்ணையும் அழுத்தாமல் அழைப்பை துண்டித்தால், அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் அதே கேள்வியுடன் அழைப்பு வருகிறது. எத்தனை முறை துண்டித்தாலும் அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது.

வாக்குரிமை எந்தளவு பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றோ, அதே அளவுக்கு யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த குரல் பதிவு அழைப்பில், ஏதாவது ஒரு வேட்பாளரை தேர்ந்தெடுத்தால்தான், அடுத்து அழைப்பு வராமல் உள்ளது. இல்லையென்றால், தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. இதனால் பல்வேறு தரப்பு பொதுமக்கள் அவதி அடைகிறோம். இவற்றை எல்லாம் தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்த வேண்டும்” என்றனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours