“400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை மக்கள் முறியடிப்பார்கள்” என்று அக்கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “400-க்கும் அதிகமான இடங்களில் வென்று பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதி. நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள் போர்வையில் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை மக்கள் முறியடிப்பார்கள். இதுவரை மூன்று கட்ட வாக்குப் பதிவில் 33 கோடி பேர் அதாவது 68.1 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். அடுத்த நான்கு கட்டங்களில் 258 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. உலகிலேயே அதிகமானோர் வாக்களிக்கும் தேர்தல் இந்திய மக்களவைத் தேர்தல்தான். இத்தனை கோடி பேர் வாக்களிக்கும் தேர்தல் மிகமிக அமைதியாக நடந்துள்ளது. இந்திய ஜனநாயகத்தின் வலிமை இது.
முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடந்தது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் முடிந்த ஏப்ரல் 17ம் தேதி வரை கருத்துக் கணிப்புகள் வெளியாகிக் கொண்டிருந்தன. இதுவரை வெளிவந்த 2024 மக்களவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள், பாஜகவுக்கு எதிரான ஊடகங்கள் எடுத்த கருத்துக் கணிப்புகளில்கூட பாஜகவுக்கு மீண்டும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்றே வந்தன. பெரும்பாலான கணிப்புகள் பாஜகவுக்கு 350 முதல் 400 இடங்கள் வரை கிடைக்கும் என்றே கூறியது.
ஆனால், முதல் இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது. வட மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த இடங்கள் வராது என்ற ஒரு பிரச்சாரத்தை, நடுநிலையாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ற பெயரில் முன்னெடுத்துள்ளனர். ‘இண்டி’ கூட்டணி கட்சிகளைவிட அக்கூட்டணி வெற்றிக்கு நடுநிலையாளர்கள் போர்வையில் உலா வருபவர்கள் அதிகம் உழைக்கிறார்கள்.
பாஜகவுக்கு எதிராக நாள்தோறும் அவதூறுகளை, கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார்கள். பாஜகவை ‘இந்துத்துவ கட்சி’எனப் பேசுவது மதவாதம் இல்லையாம். சிறுபான்மையினர் வாக்குகளை மொத்த அறுவடை செய்ய இந்து மதத்தை இழிவுபடுத்துவது, சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வது மதச்சார்பின்மையாம். ஏன் இந்து மதத்தை, இந்து நம்பிக்கைகளை இழிவுபடுத்துகிறீர்கள் என்று கேட்டால் மதவாதிகள் என்கிறார்கள்.
இந்தியர்களுக்கு என தனித்துவம் எதுவும் இல்லை. அவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் போல, ராகுல் காந்தியின் குரு, காங்கிரஸ் வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா பேசுகிறார். இதையெல்லாம் பிரதமர் மோடி மக்களிடம் அம்பலப்படுத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல் பாஜகவுக்கு எதிரான பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளன.
மக்கள் சக்திக்கு முன்பு எந்த பொய் பிரச்சாரமும் எடுபடாது. மக்களின் பெரும் ஆதரவோடு எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை எல்லாம் தூள்தூளாக்கி குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மூன்றுமுறை, மக்களவைத் தேர்தலில் இரண்டு முறை என தொடர்ந்து 5 முறை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வென்றுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக 400-க்கும் அதிகமான இடங்களில் வென்று ஆட்சி அமைப்பது உறுதி. எத்தனை சதித் திட்டங்களைத் தீட்டினாலும் தடுக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.
+ There are no comments
Add yours