தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து, பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து வேளாண் துறை செயலர் அபூர்வா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் அனைத்து பயிர்களையும் உள்ளடக்கியதாக இந்த பட்ஜெட்உருவாக்கப்பட்டுள்ளது. மண்வளம், ஊட்டச்சத்து பாதுகாப்பு, வேளாண் இயந்திரமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. விளைபொருட்களை மதிப்புக்கூட்டுதல், புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்குதல், நீராதாரங்களை வலுப்படுத்த திட்டங்கள் உள்ளன.
நீரிழிவு நோயாளிகளுக்கான, சர்க்கரை அளவு குறைந்த அரிசியான சீவன் சம்பா உள்ளிட்ட பாரம்பரிய நெல் வகைகள் விற்பனையை ஊக்குவித்தல், ஆய்வு செய்தல் போன்ற எங்கள் திட்டங்களின் மூலம் மக்கள் நலனுக்கும் இந்த வேளாண் பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வட்டாரத்துக்கு ஒருகிராமத்தில், உயிர்ம வேளாண்மை குறித்த மாதிரி பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். பிற மாநிலங்களில் பிரபலமான பயிர்களையும் இங்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்.
ஏற்கெனவே உழவர் சந்தைகள்உள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் 100 உழவர் அங்காடிகள் திறப்பதாக அறிவித்துள்ளோம். இதில், வேளாண் உற்பத்தி பொருட்களை துறையே கொள்முதல் செய்து, ஒரு பொதுவான பெயரின் கீழ் நேரடியாகவும், இணையவழியாகவும் விற்பனை செய்ய உள்ளோம்.
புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ட்ரோன் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துவதற்கான திட்டமும் உள்ளது.
கரும்பு பயிரை பொறுத்தவரை, அதிகப்படியாக 111 டன் மகசூல்பெற்றுள்ளோம். சர்க்கரை ஆலைகளுக்கு புதிய இயந்திரங்கள், கரும்பு வெட்டும் இயந்திரங்கள் வாடகைக்கும், மானிய விலையில் வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். தமிழகத்தில் கள் விற்பனைதொடர்பாக பிற துறைகளுடன் இணைந்து தமிழக அரசு கொள்கை முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
உடன் வேளாண் துறை சிறப்புசெயலர் பொ.சங்கர், சர்க்கரைத்துறை ஆணையர் விஜயராஜ்குமார், வேளாண் ஆணையர் ஜி.பிரகாஷ் உள்ளிட்டோர் இருந்தனர்.
கரும்பு சாகுபடி பரப்பு குறைவு: சர்க்கரைத் துறை ஆணையர் விஜயராஜ்குமார் கூறும்போது, “தமிழகத்தில் 3 லட்சம் ஹெக்டேராக இருந்த கரும்பு சாகுபடி பரப்பு, ஒன்றரை லட்சம் ஹெக்டேராகக் குறைந்துவிட்டது. மத்திய அரசின் ரூ.2,919 ஆதார விலையுடன், ரூ.215 ஊக்கத்தொகை என ரூ.3,134 வழங்கப்படுகிறது.
கரும்பின் பிழிதிறன் 9 சதவீதமாக இருந்தால் இந்த தொகை கிடைக்கும். வட மாவட்டங்களில் 11 சதவீதம் வரை பிழிதிறன் உள்ளது. அவ்வாறாகப் பார்க்கும்போது ஒவ்வொரு சதவீதத்துக்கும் ரூ.34 கூடுதலாக கிடைக்கும்” என்றார்.
+ There are no comments
Add yours