விழுப்புரம்: மது ஒழிப்பைப் பற்றி பேசுவதற்கு தகுதியான கட்சி பாமக மட்டும் தான் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக கூறியதாவது: காவிரி பாசன விவசாயிகள் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் கிடைக்கவில்லை. கூட்டுறவு வங்கிக் கணக்கை வருமானவரித் துறை முடக்கி வைத்திருப்பதே இதற்குக் காரணமாகும். ரூ.1 கோடிக்கும் மேல் பரிவர்த்தனை உள்ள கணக்குகளை 11 சதவீதம் பிடித்தம் செய்யாததால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது . இதனால் சம்பா சாகுபடிக்கு கடன் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். தமிழக அரசு வருமான வரித் துறையிடம் பேசி இந்த முடக்கத்தை நீக்க முயற்சி செய்யவேண்டும்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தொடர்ந்து சொல்லி வருகிறோம். ஆனால், அதற்கு முதல்வர் மறுத்து வருகிறார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதிலிருந்து ரூ.9,540 கோடி முதலீடு கிடைக்கும் என்று சொல்லிவருகிறார். ஆனால், ஒரு பைசாகூட வரவில்லை என நான் கூறிவருகிறேன்.
முதல்வரின் ஸ்பெயின் பயணத்தில் தூத்துக்குடி அருகே தளவாட பூங்கா அமைக்க ரூ.2,500 கோடி முதலீடு செய்வது குறித்து உறுதியான திட்டம் இல்லை என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. எனவே தான் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாமக வலியிறுத்தி வருகிறது.
20 மாதங்களாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ன செய்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத உள் ஒதுக்கீடு செய்ய ஆய்வு செய்து அறிக்கை வெளியிட பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு அரசு ஆணையிட்டு இன்றுடன் 20 மாதங்கள் முடிந்தும் இந்த ஆணையம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. முதலில் 3 மாதங்கள் காலக்கெடு அளிக்கப்பட்டு பின் 3 முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை திரட்ட ஆணையம் என்ன செய்யப்போகிறது? இல்லை, முதல்வர் கூறியது போல மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தும் வரை காத்திருக்கப் போகிறதா? பிறகு எதற்கு இந்த ஆணையம் உள்ளது? அரசும் ஆணையமும் கூட்டணி அமைத்துக் கொண்டு வன்னிய மக்களை ஏமாற்ற வேண்டும் என நினைத்தால் அவர்களுக்கு வன்னிய மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.
நெல் கொள்முதல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மவட்டம், வலசக்காடு நெல்முதல் நிலையத்தில் நெல்லை கொள்முதல் செய்ய ரூ.50 ஆயிரம் கையூட்டு கேட்டதால் விவசாயி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ.50 கையூட்டு பெறப்படுகிறது. வேளாண் அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இந்நிலை உள்ளது. இந்த ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கான கல்வி நிதியை மத்திய அரசு ஒதுக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். தமிழகத்திற்கு தரவேண்டிய ரூ. 573 கோடியை ஒதுக்க மத்திய அரசு மறுத்துள்ளதால் மோதல் முற்றுகிறது. பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தமிழகத்தில் திறக்கவேண்டும் என மத்திய அரசு நிபந்தனைகளை விதிப்பதும் அதை தமிழக அரசு மறுப்பதும்தான் இச்சிக்கலுக்கு காரணம். இதனை சரி செய்ய அமைச்சர் குழுவை டெல்லிக்கு அனுப்பி கல்வி நிதியை வழக்க வலிறுத்தவேண்டும். அதன் பிறகும் மத்திய அரசு மறுத்தால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சீனப் பூண்டுகள் உடல்நலத்திற்கு கேடு என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தடை செய்யப்பட்டது. ஆனால், தற்போது சீனப் பூண்டுகள் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. சீனாவில் பூண்டுகள் பூச்சிமருந்து தெளிக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பூஞ்சை உள்ளது. அதில் மருத்துவ நலன்கள் ஏதுமில்லை. இப்பூண்டு ஆபத்தானது. இந்த பூண்டு விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்தவேண்டும். கடை கடையாக உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, “மதவாத கட்சியான பாஜக, சாதியவாத கட்சியான பாமக ஆகிய கட்சிகளுக்கு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு இல்லை என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “ தமிழக அரசியல் கட்சிகள் மது ஒழிப்பை வலியுறுத்தி வருவது மகிழ்ச்சிதான். ஆனால், மது ஒழிப்பைப் பற்றி பேச தகுதியான கட்சி பாமக மட்டும் தான். கடந்த 44 ஆண்டுகளாக மதுவிலக்கு வேண்டி பாமக போராடி வருகிறது. ராஜாஜியும் ஓமந்தூராரும் மதுவிலக்கை சென்னை மாகாணத்தில் கொண்டு வந்தனர். திமுக அதை ரத்து செய்தபோது கொட்டும் மழையில் 94 வயதில் ராஜாஜி கலைஞர் வீட்டுக்கே சென்று மது விலக்கை தொடரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனாலும் மது விலக்கை ரத்துசெய்துவிட்டு இன்று திமுகவினர் மது ஆலைகளை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 35 ஆண்டுகளில் மது ஒழிப்புக்காக 200-க்கும் அதிகமான போராட்டங்களை பாமக நடத்தியுள்ளது. பாமக மகளிரணி மது ஒழிப்பு மாநாடு நடத்தியது. தமிழகத்தில் இருந்த 7,200 டாஸ்மாக் மதுக்கடைகளை 4,800 ஆக குறைத்தது பாமகதான். இதற்கான சட்டப் போராட்டங்களை பாமக தான் செய்தது. காலை 8 மணி முதல் தொடர்ந்து 16 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டத்கை 10 மணி நேரமாக குறைக்க வைத்தது பாமக. பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்கு என பாமக அறிவித்த பின்பே மற்ற கட்சிகள் வலிறுத்தத் தொடங்கின. பாமக அரசியலிலும், மது ஒழிப்பிலும் எங்கள் பயணம் எப்போதும் போல தொடரும்” என்றார் ராமதாஸ்.
பேட்டியின் போது, பாமக தலைமை நிலையச் செயலாளர் அன்பழகன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
+ There are no comments
Add yours