சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு, தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து சொன்ன கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. கஸ்தூரியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், ‘தெலுங்கு மக்களுக்கு எதிராக பேசியதாகக் கூறப்படுவது அப்பட்டமான பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். நான் ஒரு பிராமணர் என்பதால் இப்படியான பொய்களை கூறுகிறார்கள்’ என விளக்கமும் அளித்திருந்தார்.
காவல் ஆணையரிடம் புகார்: இந்நிலையில், தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரில், ‘எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் பொதுவெளியில் ஒட்டுமொத்த தெலுங்கு சமுதாயத்தில் உள்ள அனைத்து பெண்களையும் நடிகை கஸ்தூரி இழிவுபடுத்தி உள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. புகாரின் அடிப்படையில், நடிகை கஸ்தூரி மீது, எழும்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
+ There are no comments
Add yours