சென்னை: ‘டாஸ்மாக் மதுவில் கிக் இல்லை’என சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பாமக தலைவர் அன்புமணி: “தமிழகத்தில் முழு மதுவிலக்கைகொண்டு வருவதற்கான சூழல்இல்லை. தமிழகத்தில் மது விலக்கை நடைமுறைப் படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” என மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமியும், “உழைப்பவர்களின் அசதியை போக்க அவர்களுக்கு மது தேவை. டாஸ்மாக் மதுவில் ‘கிக்’ இல்லாததால் கள்ளச்சாராயத்தை நோக்கி செல்கின்றனர்’’ என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் சட்டப்பேரவையில் கூறியிருக்கின்றனர்.
அமைச்சர்களின் கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழக அரசின் தோல்வியையும், இயலாமையையுமே இவை காட்டுகின்றன. மதுவிலக்கை நடைமுறைப்படுத்த எந்த சூழலும் தேவையில்லை. நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போது மானது. ஆனால், மது ஆலை அதிபர்களின் ஆதரவைபெற்ற திமுக அரசுக்கு அந்த எண்ணம் இல்லை. மது விலக்கு சாத்தியமில்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சட்டப்பேரவையில் டாஸ்மாக் சரக்கில் ‘கிக்’ இல்லை என ஒரு மூத்த அமைச்சர், அதுவும் முதல்வரை வைத்துக்கொண்டே கூறியுள்ளார். மூத்தஅமைச்சரின் பதில் கண்டனத்துக்குரியது. டாஸ்மாக் கடைகளில் ‘கிக்’ இல்லை, என்றால் அந்த அளவுத் தரம் இல்லாத ஒரு டாஸ்மாக்கை தமிழக அரசு ஏன் நடத்துகிறது? எனவே தமிழகத்தில் ஏற்பட்ட இத்தனை உயிரிழப்புகளுக்கும் தற்போதைய தமிழக அரசுதான் காரணம் என்பதை அமைச்சர் துரைமுருகன் தன் வாயாலேயே ஒப்புக்கொண்டார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: கடந்த சட்டப்பேரவை தேர்தல்அறிக்கையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்று கூறிவிட்டு, இன்றைக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கு சாத்தியம் இல்லை என அத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகமாகும். மேலும் டாஸ்மாக் கடைகளை விரைவில் படிப்படியாக மூடுவோம் என்று கூறுவதும் மக்களை ஏமாற்றும் செயல். எனவே இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக பூரண மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: சட்டப்பேரவையில் மூத்த அமைச்சர்களின் பொறுப்பற்ற பேச்சு கடும் கண்டனத்துக்குரியது. உழைப்பவர்களின் அசதியைப் போக்க அவர்களுக்கு மது தேவை எனவும், அரசு விற்கும் மதுபானத்தில் ‘கிக்’ இல்லை என்பதால் கள்ளச் சாராயத்தை நாடிச் செல்வதாகவும் அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது அவருக்கும், அவர் வகிக்கும் பதவிக்கும் உகந்ததல்ல. தமிழகத்தில் மதுபானக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கை கொண்டுவர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வி.கே.சசிகலா வெளியிட்ட அறிக்கையில், “சட்டப்பேரவையில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்த மதுவிலக்கு சட்டத்தை திருத்தி தாக்கல் செய்திருப்பது பயனற்ற ஒன்று. இது ஏதோ பழைய பாத்திரத்துக்கு புதிய முலாம் பூசியிருப்பது போல் தோன்றுகிறது. கள்ளக் குறிச்சி பழியை தவிர்க்கவே திமுகவினர் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நாடகம் ஆடுகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours