சென்னை வந்த பிரதமர் மோடி பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா மற்றும் முன்னாள் தமிழக அமைச்சர் ஹெச்.வி. ஹண்டே ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் 4வது முறையாக சென்னை வந்த பிரதமர் மோடி, இன்று கல்பாக்கத்தில் அணுமின் நிலையத்தில் ஈரணு உலை திட்டத்தை தொடக்கி வைத்தார். பின், சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் சென்னையில் முக்கியப் பிரமுகர்கள் சிலரையும் சந்தித்து உரையாடி இருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, முன்னாள் அமைச்சர் ஹண்டேவைச் சந்தித்துப் பற்றிக் கூறியுள்ளார்.
“தமிழகத்தைச் சேர்ந்த மதிப்பிற்குரிய அரசியல்வாதியும் அறிவுஜீவியுமான முன்னாள் அமைச்சர் டாக்டர் ஹெச்.வி.ஹண்டே சென்னை பொதுக்கூட்டத்தில் என்னைச் சந்தித்து ஆசி வழங்கினார். அவருக்கு நன்றி தெரிவித்து, விக்சித் பாரத் கனவை நனவாக்க பாடுபடுவோம் என உறுதி அளித்தேன்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா அவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து உரையாடியுள்ளார். “சென்னையில் வைஜெயந்திமாலா அவர்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. அண்மையில் அவர் பத்ம விபூஷன் விருது பெற்றார். இந்திய சினிமா உலகிற்குச் செய்த பங்களிப்பிற்காக அவர் நாடு முழுதும் போற்றப்படுகிறார்” என பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில் கூறியிருக்கிறார்.
முன்னதாக, அர்ப்பணிப்பு மிக்க பாஜக தொண்டர் ஒருவரைச் சந்தித்து பற்றி பிரதமர் பகிர்ந்துகொண்டிருந்தார். “சென்னை விமான நிலையத்தில், நமது கட்சி நிர்வாகிகளில் ஒருவரான திரு அஸ்வந்த் பிஜய் அவர்கள் என்னை வரவேற்க காத்திருந்தார். சற்றுமுன் தான், அவரது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் என்றும், ஆனால் அவர் இன்னும் அவர்களை சந்திக்கவில்லை என்றும் என்னிடம் கூறினார். இந்த நேரத்தில் அவர் இங்கு வந்திருக்கக் கூடாது என்றும், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆசிகளையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “நமது கட்சியில் கடமை மற்றும் அர்ப்பணிப்புள்ள உறுப்பினர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நமது கட்சியினரின் இத்தகைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும்போது நான் உணர்ச்சிவசப்படுகிறேன்” எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours