பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா !

Spread the love

தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது' மற்றும் சிறந்த 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருது’ வழங்கும் விழா திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் மா.பி ரதீப்குமார் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அரசின் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திய பள்ளி தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு ரூ.10 லட்சத்துக்கான காசோலையுடன், அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுகளையும், பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்திய 76 பள்ளிகளுக்கு பேராசிரியர் அன்பழகன் விருதுகளையும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசும் போது, “புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதமாக அதிகரித்துள்ளது” என்றார். பள்ளிகல்வித் துறை இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜ முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், நடப்பாண்டு கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள் மேற்கொண்ட முயற்சி காரணமாக, அந்த எண்ணிக்கை 12 ஆயிரமாக குறைந்துள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அரசுப் பள்ளிகளில் மார்ச் 1-ம் தேதியே தொடங்கப்பட்டுவிட்டது. அரசுப் பள்ளிகளில் இதுவரை 25 ஆயிரம் குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours