அமித்ஷா பதவி விலக கோரி தமிழக நகரங்களில் நாளை ஆர்ப்பாட்டம்

Spread the love

சென்னை: அம்பேத்கரை இழிவாகப் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை (டிச.23) ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்று அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் மேகாலயா, மிசோராம், அருணாசலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளருமான டாக்டர் ஏ.செல்லக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நாடாளுமன்ற விவாதத்தின்போது அம்பேத்கர் பற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா கேலியாகவும் இழிவாகவும் பேசியுள்ளார். அந்தப் பேச்சு நாலாந்தர பேச்சாளர், தெருமுனை பேச்சாளரைப் போல இருந்தது. நாட்டு மக்களுக்கு சம உரிமை, சமத்துவம், சுதந்திரத்தை வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்துக் கொடுத்த அம்பேத்கரை கொச்சைப்படுத்திப் பேசுவது வேதனையளிக்கிறது. அது மிகவும் கண்டிக்கத்தக்கது.

அரசியலமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட பிறகு அது தொடர்பான இறுதிக் கூட்டத்தில் அம்பேத்கர் பேசும்போது, ”காங்கிரஸ் மட்டும் இல்லாவிட்டால் இந்த சட்டத்தை விரைவாகவும் உரிய சீர்திருத்தங்களுடனும் வடிவமைத்திருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு நற்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கும் அம்பேத்கருக்கும் இருந்த உறவு பற்றி தெரியாமல் அமித் ஷா பேசியிருக்கிறார். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் பற்றி அமித்ஷாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அம்பேத்கர் பற்றி அவர் பேசியதற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவின்பேரில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்கனவே போராட்டம் நடைபெற்றது. அதுபோல, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரவின்பேரில் நாடு முழுவதும் நாளை (டிச. 24) -ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். அப்போது அமித் ஷாவை குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் மனுக்களை மாவட்ட ஆட்சியர்களிடம் காங்கிரஸ் கட்சியினர் அளிப்பார்கள். முன்னதாக அவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் செல்வார்கள்” என்று தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours