தண்டனை எந்த விதத்திலும் குழந்தையை நல்வழிப்படுத்தாது… சென்னை உயர் நீதிமன்றம் !

Spread the love

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு தண்டனை வழங்குவதை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த காமாட்சி சங்கர் ஆறுமுகம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்யும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘குழந்தைகள் உரிமைகளை பாதுகாப்பதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. பள்ளிகளில் தண்டனை வழங்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘தண்டனை எந்த விதத்திலும் குழந்தையை நல்வழிப்படுத்தாது. குழந்தைகளை பாதுகாப்பான சூழலில் வளர அனுமதிப்பதுடன், அவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்க வேண்டும். குழந்தைகளை கண்காணிக்கலாமே தவிர, அடக்கி வைக்கக் கூடாது. உலகளவில் குழந்தைகள் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்துவது முக்கியமானது.

தண்டனை வழங்குவதை அகற்ற வகை செய்யும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் விதிகளை அமல்படுத்த தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டார். தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றுவது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், முன்னாள் மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்’ என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours