தமிழகத்தில் புதுப்பொலிவு பெறும் ரயில் நிலையங்கள்

Spread the love

சென்னை: ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்த, ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்களில் பணிகள் நடந்து வருகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை விழுப்புரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகர்கோவில் உள்ளிட்ட 18 ரயில் நிலையங்களில் ரூ.515 கோடியில் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் விழுப்புரம், புதுச்சேரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொண்டு நவீன வசதிகளுடன் தரம் உயர்த்த ரயில்வே துறையின் ‘அம்ரித்பாரத்’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.23.50 கோடியில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ரயில் நிலையத்தில் 4 லிப்டுகள் அமைக்கப்பட்டு, அதில் 1, 4-ம் நடைமேடைகளில் லிப்ட் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மேலும் 2,3-வது நடைமேடைகளுக்கு சேர்த்து ஒரு லிப்ட், 6 வது நடைமேடைக்கு ஒரு லிப்ட் அமைக்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் ரயில் நிலைய வளாகத்தில் இருந்த ரயில்வே போலீஸ் நிலைய பழைய கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக ரயில் நிலைய முதல் நடைமேடையில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

ரயில் நிலைய முகப்பு பகுதிகளில் பூங்கா வசதிகளுடனும், நகரப்பேருந்துகள் வந்து செல்லும் வகையிலும் 2 நுழைவாயில்கள் அமைக்கும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பெருநகரங்களில் உள்ள ரயில் நிலையங்களைப் போல் போதிய இடவசதிகளுடன் கூடிய பயணச்சீட்டு வழங்கும் மையம் அமைக்கப்பட உள்ளது. வெளியில் இருந்து பார்க்கும் பயணிகளுக்கு தெரியும் வகையில் இந்த பயணச்சீட்டு வழங்கும் மையம் கட்டப்பட உள்ளது.

மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுதல், நகரும் நடை மேடைகள், பயணிகள் தகவல் காட்சி அமைப்பு, பொது அறிவிப்பு அமைப்பு, கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவற்றை அமைக்கும் பணிகள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக தற்போது பயணிகளுக்காக குளிர்சாதன வசதியுடன் தங்கும் ஓய்வறையும் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இதில் ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி ஓய்வெடுக்கலாம். இந்த குளிர்சாதன அறையில் ஓய்வெடுக்க பயணி ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 கட்டணம், டீலக்ஸ் கழிப்பறைக்கு ரூ.2 கட்டணம், 24 மணி நேரத்திற்கு பயணிகள் தங்கள் லக்கேஜை பாதுகாப்பாக வைக்க ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விழுப்புரம் ரயில் நிலையம் கடந்த 2022-23-ம் ஆண்டில் 54.71 லட்சம் பயணிகளுக்கு தனது சேவையை வழங்கி ரூ.38 கோடியே 29 லட்சம் வருவாயை ஈட்டியுள்ளது. இந்த புதிய பொலிவால் விழுப்புரம் ரயில் நிலையம் மேலும் சிறப்பான சேவையை வழங்கி வருவாயை ஈட்டும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours