ராஜராஜ சோழனின் 1039 வது சதய விழா- தஞ்சையில் கோலாகலம் !

Spread the love

தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழாவை முன்னிட்டு நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1039-வது சதய விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி, கருத்தரங்கம், கவியரங்கம், பரதநாட்டியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, 2-வது நாளாக நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயில் பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

பின்னர், திருமுறை நூல்களை அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து, 100-க்கும் அதிகமான ஓதுவாமூர்த்திகளுடன் கோயிலிலிருந்து புறப்பட்டு 4 ராஜ வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு ச.முரசொலி எம்.பி., ஆட்சியர் மா.பிரியங்கா பங்கஜம், மேயர் சண்.ராமநாதன், அரண்மனை தேவஸ்தான அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சதய விழாக் குழுத் தலைவர் து.செல்வம், அறநிலையத் துறை உதவி ஆணையர் கோ.கவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர். பின்னர், பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, பெருவுடையார் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 39 வகையான மங்கலப் பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சுவாமி, அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழகம் மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஓதுவாமூர்த்திகள் பங்கேற்ற தேவார பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், 1,039 கலைஞர்கள் பங்கேற்ற சிறப்பு பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பெரியநாயகி மற்றும் பெருவுடையார், மாமன்னர் ராஜராஜ சோழன், பட்டத்தரசி லோகமாதேவி, ராஜேந்திர சோழனின் உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

தொடர்ந்து, கருத்தரங்கம், மாமன்னன் ராஜராஜன் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், அரண்மனை தேவஸ்தானம், இந்து சமய அறநிலையத் துறையினர் இணைந்து செய்திருந்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours