நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட ராஜேஸ் தாஸ்-க்கு நெஞ்சுவலி !

Spread the love

தையூரில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியை தாக்கிவிட்டு அத்துமீறி நுழைய முயன்றதாக ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் அளித்த புகாரில், முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ், கேளம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட போலீசார் சேருடன் தூக்கி சென்ற சம்பவத்தின் பின்னணி என்ன?

கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது முதலமைச்சரின் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்,

பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அந்த பெண் அதிகாரி பரபரப்பு புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நிதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது. இதனையடுத்து ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில்
சுப்ரீம் கோர்ட் கைதுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

பாலியல் புகாரில் ராஜேஷ் தாஸ் சிக்கியவுடன் அவரது மனைவியும், தற்போதைய தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலாளருமான பீலா அவரை பிரிந்து சென்று விட்டார். பீலா ராஜேஷ் என்ற பெயரை பீலா வெங்கடேசன் என்று தனது தந்தை பெயருடன் இணைத்து மாற்றிக்கொண்டார்.

முன்னதாக ராஜேஷ் தாசும், பீலாவும் கணவன்-மனைவியாக வாழ்ந்தபோது செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் பிரம்மாண்ட பங்களா வீடு ஒன்றை வாங்கினார்கள். தற்போது இருவரும் பிரிந்ததால் இந்த பங்களா வீடு பீலா வெங்கடேசன் நியமித்த காவலாளி கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இதற்கிடையே உச்சநீதிமன்ற உத்தரவு மூலம் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிய ராஜேஷ் தாஸ் கடந்த 18-ந்தேதி தையூர் பங்களா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த காவலாளியை தாக்கி வெளியேற்றியதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து கேளம்பாக்கம் போலீசாருக்கு பீலா வெங்கடேசன் புகார் மனு அனுப்பினார். அதில் ராஜேஷ் தாஸ் மற்றும் அடையாளம் தெரியாத 10 நபர்கள் தனக்கு சொந்தமான தையூர் வீட்டின் உள்ளே அத்துமீறி நுழைந்து காவலாளியை தாக்கி செல்போனை பறித்து விட்டு உள்ளே தங்கி உள்ளனர்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பீலா வெங்கடேசன் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் ராஜேஷ் தாஸ் மற்றும் 10 பேர் மீது கேளம்பாக்கம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், ராஜேஸ் தாஸை வெள்ளிக்கிழமை கேளம்பாக்கம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் சுமார் 4 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர்

கைது செய்யப்பட்ட ராஜேஷ் தாஸை பின் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் இருந்து திருப்போரூர் மருத்துவனைக்கு அழைத்து சென்று உடல் பரிசோதனை செய்து அங்கிருந்து திருப்போரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தின் உள்ளே சென்ற ராஜேஷ் தாஸ் சில நிமிடங்களில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி நீதிமன்றத்தில் இருந்து போலீசார் தாங்கி பிடித்தபடி வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்த போலீசார் மருத்துவமனைக்கு செல்லாமல் காவல்துறை வாகனத்திலேயே அமர வைத்தனர். இதையடுத்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் பலர் தாங்கி பிடித்தபடி உள்ளே அழைத்து சென்றனர்.

அப்போது நடக்க முடியவில்லை என ராஜேஷ் தாஸ் கூறியதால் அவரை நாற்காலியில் அமர வைத்து தூக்கி சென்று மேஜிஸ்திரேட் அனுப்பிரியா முன்பு ஆஜர்படுத்தினர். ஏற்கெனவே பாலியல் புகாரில் தண்டனை பெற்ற ராஜேஷ் தாஸ், கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours