சென்னை: பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் (52) கடந்த 5-ம் தேதி, பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள அவரது வீட்டின் முன் மர்ம கும்பலால் வெட்டிகொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக ஏற்கெனவே கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த 11 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடத்தின் வங்கிக் கணக்குகளில் இந்த கொலைக்கான பணம் செலுத்தப்பட்டதை போலீஸார் தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் திருவேங்கடத்தின் வீட்டருகே புதைக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பாக விசாரிப்பதற்காக திருவேங்கடத்தை புழல் சிறையில் இருந்து இன்று (ஜூலை 14) அதிகாலை போலீஸார் அழைத்துச் சென்றுள்ளனர். சரியாக 5.30 மணியளவில் வெஜிடேரியன் வில்லேஜ் என்ற பகுதியில் போலீஸாரின் கவனத்தை திசை திருப்பி திருவேங்கடம் தப்பித்ததாக கூறப்படுகிறது.
அங்கிருந்து தப்பித்து வெஜிடேரியன் வில்லேஜ் பகுதிக்குள் நுழைந்த திருவேங்கடத்தை போலீஸார் துரத்திச் சென்றுள்ளனர். அங்கு திருவேங்கடம் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி ஒன்றை எடுத்து காவல் துறையினரை சுட முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்புக்காக அவரை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் இருமுறை சுட்டுள்ளனர். இதில் அவரது இடது நெஞ்சுக்கு அருகேயும் வயிற்று பகுதியிலும் குண்டுகள் பாய்ந்துள்ளன.
இதில் திருவேங்கடம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். என்கவுன்ட்டர் செய்யப்பட்ட திருவேங்கடத்தின் உடல் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.
திருவேங்கடத்தின் மீது ஏற்கெனவே, 2015ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை வழக்கு உட்பட மூன்று கொலை வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours