கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி, இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கவுஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தார்.
அவர் தனது மனுவில், “கள்ளச்சாராயம் அருந்துவது சட்டவிரோத செயல். எனவே, அதனை அருந்தி உயிரிழந்தவர்களை, பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது. தீ விபத்து உள்ளிட்ட இதர விபத்துகளில் குறைந்த இழப்பீடு வழங்கப்படும் நிலையில், விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்பட்டது என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்டம், சமூக சேவைகளுக்காக உயிர்நீத்தவர்கள் அல்ல. இவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும் அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு என்பது அதிகம் எனவும், எதன் அடிப்படையில் இந்த தொகை வழங்கப்படுகிறது? என அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதைத் தொடர்ந்து இந்த இழப்பீட்டுத் தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்குமாறு கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை இரண்டு வாரங்கள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
+ There are no comments
Add yours