மயிலாடுதுறை மாவட்டத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறிருப்பதாவது :
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தில்லையாடி கிராமத்தில் வாண வெடி தயாரிக்கும் தனியார் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 நபர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவரும் விரைவில் பூரணமாக குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
தமிழ்நாட்டில் பட்டாசு தயாரிக்கும் தொழில் நிறுவனங்கள், குடோன்கள் ஆகியவற்றில் விபத்து ஏற்பட்டு அதில் ஏழை எளிய சாமானிய தொழிலாளர்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் கவலையை அளிக்கிறது.
திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களில் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும்.
தமிழக அரசு அவ்வாறு முறையான ஆய்வுகளையும், கண்காணிப்புகளையும் சரிவர மேற்கொண்டு இருந்தால் இது போன்ற விபத்துகள் ஏற்பட்டு இத்தனை உயிரிழப்புகள் இன்றைக்கு ஏற்படாமல் தடுத்து இருக்க முடியும். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் செயல்படும் அனைத்து பாட்டாசு தயாரிக்கும் ஆலைகளிலும் உரிய ஆய்வுகளை மேற்கொண்டு இதில் பணியாற்றுகின்ற தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணிக்கம், மதன், மகேஷ் மற்றும் ராகவன் ஆகியோரின் குடும்பத்தினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னார்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours