“போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பணம் பெற்ற வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக, எம்பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் எனக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “வழக்கில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யும் நிலையில், விசாரணயை முடக்கும் நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, போதிய காரணங்கள் ஏதுமில்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
வேலைக்கு பணம் பெற்ற வழக்கில் முக்கிய பங்காற்றியுள்ள செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. வழக்கை மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், முதன்மை அமர்வு நீதிமன்ற விசாரணைக்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
+ There are no comments
Add yours