சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ளசெந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் பல முறை சோதனை நடத்தினர்.
கரூர் அடுத்த ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டிலும் கடந்த ஜூன் 13-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கிடையே, புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக வரும் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி தம்பி அசோக் குமாருக்கு எதிராக ஏற்கெனவே லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். அதுமட்டுமின்றி வீட்டில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் அமலாக்கத் துறையினர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியான நிலையில் , அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours