வார இறுதியில் ஒரு நாளை கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்-கோவையில் முதல்வர் ஸ்டாலின் உரை

Spread the love

கோவை: “திமுக நிர்வாகிகள் உங்களது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தைக் கழகத்துக்கென ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள்” என்று கோவையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று (நவ.5) கோவை வந்தார். தொடர்ந்து நேற்று (நவ.5) மாலை போத்தனூர் பிவிஜி அரங்கில் நடந்த ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – தலைவர் கலைஞர் ஆகிய மூவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஊர் இந்தக் கோவை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் – கோவைக்கும் வரலாற்றுரீதியான பிணைப்பு இருக்கிறது.

திராவிட இயக்கத்துக்கும் – கழகத்துக்கும் ஏராளமான தளகர்த்தர்களைக் கொடுத்த மண், இந்தக் கோவை மண். ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகச் செயலாளர்களும் – மாவட்டத்தின் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் நிர்வாகிகளும் வந்திருக்கிறீர்கள். உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தோடு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும். நம்முடைய கழகத்துக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டுக்கு வேறு எந்த கட்சிக்கும் கிடையாது. நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்க முடியும். எனவே, நமது சாதனைப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும்.

இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பதுதான் மிக முக்கியம். அவர்கள்தான் எதிர்காலத்துக்கான விதைகள். எனவே, பேச்சாளர்களை அழைத்து பாசறைக் கூட்டங்களை நடத்துங்கள். ஒவ்வொரு பகுதியிலும் கொள்கை வீரர்களாக பத்து முதல் பதினைந்து இளைஞர்களை உருவாக்க வேண்டியது உங்கள் ஒவ்வொருவரின் கடமை.
நிர்வாகிகள் உங்களது குடும்பத்திற்கும், தொழிலுக்கும் நேரம் ஒதுக்கி கவனம் செலுத்துங்கள். அதே சமயம் ஒரு நாளில் இரண்டு மணி நேரத்தைக் கழகத்துக்கென ஒதுக்குங்கள். வார இறுதியில் ஒரு நாளை முழுமையாகக் கழகப் பணிக்கு ஒதுக்குங்கள். அடிமட்டத் தொண்டர்களுக்கு நீங்கள்தான் பலமாகவும் – பாலமாகவும் இருக்க வேண்டும்.

கோவை மாவட்டத்துக்குட்பட்ட பத்து சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கழகக் கூட்டணி கைப்பற்றியாக வேண்டும். அதற்கான முதல் சந்திப்புதான் இந்தக் கூட்டம். 2026-லும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது. நான் ஒரு இலக்கு கொடுத்திருக்கிறேன். 200 தொகுதிகளில் வெற்றி என்பதுதான் அந்த இலக்கு. அதனால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். எழுச்சிமிகு திமுக ஏழாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க எந்நாளும் உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்டோரும், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட ஏராளமானோரும் கலந்து கொண்டனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours