புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் காட்டுப்பகுதியில் திருச்சியைச் சேர்ந்த ரவுடி துரை, போலீஸாரால் என்கவுன்டரில் சுட்டு கொல்லப்பட்டார்.
திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் துரை என்ற துரைசாமி. இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கைது செய்வதற்காக திருச்சி போலீஸார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில், புதுக்கோட்டையில் இருந்து ஆலங்குடி வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் வம்பன் யூக்கலிப்டஸ் காட்டுப்பகுதியில் துரை பதுங்கி இருப்பதாக ஆலங்குடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலைத் தொடர்ந்து ஆலங்குடி காவல் ஆய்வாளர் முத்தையன், உதவி ஆய்வாளர் மகாலிங்கம் உள்ளிட்டோர் காட்டுப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த துரையை நெருங்கியபோது தான் வைத்திருந்த ஆயுதங்களை கொண்டு போலீஸாரிடம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, எஸ்ஐ மகாலிங்கத்தை ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸார் தற்காப்புக்காக துரையை சுட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து துரையின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் என்கவுன்டர் நடந்த யூக்கலிப்டஸ் காட்டுப்பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே நேரில் சென்று ஆய்வு செய்தார். காயம் அடைந்த எஸ்.ஐ. மகாலிங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
+ There are no comments
Add yours