திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. விழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 2ம் தேதி காலை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு திருக்கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர் கோயிலில் மலேசியா, இலங்கை, லண்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பக்தர்களும் கடந்த 6 நாட்கள் விரதம் இருந்து வருகின்றனர். பாதுகாப்பு பணியில் நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தலைமையில் 4000க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர், கடலோர காவல்படையினர் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹார விழாவை காண செல்லும் பக்தர்களுக்கு தனியாக வரிசைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது
+ There are no comments
Add yours