தமிழக சட்டசபை இன்று கூடுகிறது !

Spread the love

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. 22-ம் தேதி வரை பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றது. இருப்பினும் மக்களவைத் தேர்தல் காரணமாக மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதங்கள் நடத்தப்படாமல் பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24’ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். இதனிடையே விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 24ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே 20-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 29-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்கி வருகிற 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, பேரவை ஒத்திவைக்கப்படும். மறுநாள் காலை 9:30 மணிக்கு தொடங்கும் பேரவை நிகழ்வுகள் வருகிற 29-ம் தேதி வரை 16 அமர்வுகளாக நடத்தப்பட்டு, மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளது. இந்த சட்டப் பேரவை கூட்டத்தொடரின் போது பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதம் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

குறிப்பாக கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 33 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து பிரச்சினை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் நிலவி வரும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, மழை பாதிப்புகள் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் விவாதங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours