புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து தமிழ்நாடு பார் கவுன்சில் தீர்மானம்.

Spread the love

சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அகில இந்திய பார் கவுன்சிலை வலியுறுத்தவுள்ளதாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கூறியுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சிகள் சட்டத்தை பாரதிய சாக் ஷிய அதிநியம் ( பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம் செய்துள்ள மத்திய அரசு, அதில், பல்வேறு மாறுதல்களையும் செய்து கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய குற்றவியல் சட்டங்களுக்கு தமிழக வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுதொடர்பாக தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களால் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி போலீஸார், பொதுமக்கள் என அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த புதிய சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் மத்திய அரசை வலியுறுத்துகிறது. இதுதொடர்பாக வரைவுச்சட்டம் தயாரிக்கப்பட்ட கடந்த 2020-ம் ஆண்டே உச்ச நீதிமன்ற நீதிபதி சட்ட வல்லுநர்களை நியமித்து ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், மத்திய அரசு இதுதொடர்பாக எந்தவொரு ஆய்வோ, விவாதமோ நடத்தாமல், குறிப்பாக, பார் கவுன்சிலின் ஆலோசனைகளை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக இந்த குற்றவியல் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.இந்த குற்றவியல் சட்டங்கள் வானளாவிய அதிகாரங்களை காவல் துறைக்கு வாரி வழங்கியுள்ளது. குற்ற வழக்குகளில் விசாரணை அதிகாரிகளின் முடிவே இறுதியானது என்பதுபோல சட்டம் சர்வாதிகார ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள தனிநபர் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு என்ன என்பது போகப் போகத்தான் ஆட்சியாளர்களுக்கும்கூட தெரிய வரும்.

எனவே, அனைத்து மாநில பார் கவுன்சில் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை அமைத்து இந்த 3 சட்டங்களையும் உடனடியாக திரும்பப்பெறும்படி மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென அகில இந்திய பார் கவுன்சிலுக்கும் கோரிக்கை விடுத்துள்ளோம். அதன்பிறகும் திரும்பப்பெறப்படாவிட்டால் இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வலியுறுத்தவுள்ளோம். இந்தச் சட்டங்களை ஆராய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையில் குழுவை அமைத்த தமிழக அரசின் முடிவுக்கும், இந்த சட்டங்களை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளதற்கும் பார் கவுன்சில் சார்பில் வரவேற்பு தெரிவிக்கிறோம்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள வழக்கறிஞர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் தான் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 120 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இனி இடைநீக்கம் மட்டுமல்லாது, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களின் பதிவை நிரந்தரமாக நீக்குவது குறித்தும் பார் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என்றார். அப்போது பார் கவுன்சில் துணைத் தலைவர் வி.கார்த்திக்கேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours