சென்னை: “லட்சக்கணக்கானோரை எல்லைகளை கடந்து கனவு காண தூண்டியிருக்கிறீர்கள்” என இந்திய அணி வீரர் அஸ்வினுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “நன்றி அஸ்வின். உங்களின் அசாத்தியமான விளையாட்டு பயணம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு எண்ணற்ற கொண்டாட்டங்களுக்கான தருணங்களை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும் எல்லைகளை கடந்து லட்சக்கணக்கானோரை கனவு காண தூண்டியிருக்கிறது. வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் அஸ்வின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக புதன்கிழமை அறிவித்தார். இந்தியாவின் அபார சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அஸ்வின், டெஸ்ட் கிரிக்கெட்டில் 537 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இந்தியாவில் கும்ப்ளேவுக்கு அடுத்ததாக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் அறியப்படுகிறார்.
கடந்த 2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் விளையாடி வந்தார். 38 வயதான அவர், 105 டெஸ்ட், 116 ஒருநாள் மற்றும் 63 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2011-ல் ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்தவர். அனைத்து பார்மெட் கிரிக்கெட்டிலும் மொத்தமாக 4,394 ரன்கள் மற்றும் 765 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
+ There are no comments
Add yours