2023-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகிப்போட்டியில் வென்றவர் ஷெய்னிஸ் பலாசியோஸ். இவர் நிகரகுவா நாட்டைச் சேர்ந்தவர். இனி 2024-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி தேர்வு செய்யப்பட உள்ளார்.
இதற்கான இறுதிப்போட்டி அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு ஒவ்வொரு நாடும் சிறந்த அழகியை தேர்வு செய்கிறது. இந்தியா சார்பில் அழகியை தேர்வு செய்ய ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு இயக்குனர் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதன்படி தமிழ்நாட்டுக்கு டாக்டர் ஹேமமாலினி ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டு உள்ளார். தேனியை பூர்வீகமாகக் கொண்ட இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் புற அழகை மேம்படுத்தும் சிகிச்சையை சென்னையில் மேற்கொண்டு வருகிறார். இவர் ஏற்கனவே திருமதி அழகிப்போட்டியில் தெற்காசிய பட்டத்தை வென்றவர்.
இவர் உள்பட அனைத்து மாநில இயக்குனர்களும் பங்கேற்ற இயக்குனர்கள் அறிமுக கூட்டம் டெல்லியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய பிரபஞ்ச அழகி ஷெய்னிஸ் பலாசியோஸ் கலந்து கொண்டார். அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் ஹேமமாலினி இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது, “இப்போதெல்லாம் அழகிப்போட்டிக்கு செல்ல நிறம், உயரம், மொழி என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே அல்ல. அழகியலும் ஒரு துறை சார்ந்த தொழில்தான். தன்னம்பிக்கை இதில் மிகவும் முக்கியம். தமிழ்நாட்டு பெண்களுக்கு அது நிறையவே இருக்கிறது.
அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தமிழக அழகியை தேர்வு செய்ய நாங்கள் ஜூலை மாதம் நேர்காணல் நடத்துவோம். இதில் தேர்வு செய்யப்படுகிறவர் இந்திய அழகிப் போட்டிக்கு அனுப்பப்படுவார். நேர்காணலில் பங்கேற்க இதற்கென உள்ள நாடு தழுவிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்” என்று கூறினார்.
+ There are no comments
Add yours