சென்னை: ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.50 கோடியைக் கட்டுவதற்குக் கூட முடியவில்லையா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தமிழகப் பள்ளிக்கல்வித் துறையிடம் இருந்து, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கான கட்டண பாக்கியை உடனே கட்டவில்லையென்றால், இணைய இணைப்பு துண்டிக்கப்படும் என்று, கடிதம் வந்திருப்பதாக, இன்றைய நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் புதிய கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆட்சிக்கு வந்ததிலிருந்து, வெறும் பொய்களை மட்டுமே சொல்லி மக்களை ஏமாற்றி வரும் திமுக அரசை எப்படி நம்ப முடியும்?
கடந்த மூன்று ஆண்டுகளில், பள்ளிக் கல்விக்கான மத்திய அரசின் சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி ரூ. 5,858.32 கோடி. சமக்ர சிக்ஷா திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் நடைமுறைப்படுத்துவோம் என்று கடிதம் அளித்து விட்டு, பல திட்டங்களை இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது திமுக அரசு.
ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசுக்கு, கல்வித் துறை இணைய இணைப்புக் கட்டணமான ரூ.1.50 கோடியைக் கட்டுவதற்குக் கூட முடியவில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
+ There are no comments
Add yours