கல்வியின் முக்கியத்துவம் பற்றி தமிழக அரசுக்கு தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி விமர்சனம் வைத்துள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியதாவது..
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் நாள் என்பதை ஆசிரியர்களும், மாணவர்களும் மட்டுமே கொண்டாடும் நிலையை மாற்றி ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையை உருவாக்க வேண்டும். அது தான் நமது சமுதாயத்தை வளர்ப்பதற்காக உழைக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.
ஆனால், இன்று ஆசிரியர்களின் நிலையும், கல்வியின் தரமும் குறைந்து வருவது கவலையளிக்கும் உண்மை ஆகும். காலியாகி வரும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படுவதே இல்லை. தமிழ்நாட்டில் ஏற்கனவே குறைக்கப்பட்ட பணியிடங்கள் போக, மீதமுள்ள பணியிடங்கள் கூட முழுமையாக இன்னும் நிரப்பப்படவில்லை. நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் கூட அப்படியே காலியாகத் தான் கிடக்கின்றன. காரணம் கேட்டால், நிதி நெருக்கடி என்று ஒற்றை வரியில் கடந்து செல்கிறது தமிழக அரசு. உயிர் வாழ உயிர்வளி எவ்வளவு முக்கியமோ, அதை விட உயர்வுக்கு கல்வி முக்கியம். ஆனால், கல்வியின் முக்கியம் தமிழக அரசுக்கு தெரியவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் வகுப்பறைகள் ஆசிரியர்கள் இல்லாமல் தடுமாறும் போது கல்வித்தரம் எவ்வாறு உயரும்? ஆசிரியர்களை மதிக்காத எந்த சமூகமும் முன்னேற முடியாது. இதை உணர்ந்து ஆசிரியர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும், அதன் மூலம் அவர்கள் மாணவர்களை இன்னும் சிறப்பானவர்களாக மாற்றவும் தமிழ்நாடு அரசு உத்வேகம் அளிக்க வேண்டும். ஆசிரியர்கள், அவர்களால் மாணவர்கள், அவர்களால் இந்த சமுதாயம் முன்னேற வேண்டும்; அந்த இலக்கை நோக்கி உழைக்க ஆசிரியர்கள் நாளில் நாம் அனைவரும் உறுதியேற்றுக் கொள்ள வேண்டும்.
+ There are no comments
Add yours