விலை மதிப்பற்ற உயிர்களை காத்திட, அனைவரும் முன்வந்து ரத்த தானம் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய தன்னார்வ இரத்த தான தினம் :
இரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்த தான தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்த தான தினத்தின் கருப்பொருள் “தொடர்ந்து இரத்தம், பிளாஸ்மா தானம் செய்வோம், வாழ்வை பகிர்ந்து கொள்வோம்” என்பதாகும்.
இரத்த தானத்தின் சிறப்பு:
அறிவியலில் ஏராளமான கண்டு பிடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் இரத்தம் என்ற உயிர் திரவத்தை இன்னும் செயற்கையாக உருவாக்க இயலவில்லை. ஒவ்வொருவரின் உடலிலும் உள்ள சுமார் 5 லிட்டர் இரத்தத்தில், இரத்த தானத்தின் போது 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது.
இரத்த தானம் செய்ய 20 நிமிடங்களே ஆகும். இரத்த தானம் செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட வேலைகளை மேற்க்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான அனைவரும் 3 மாதத்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம்.
உரிய கால இடைவெளியில் இரத்த தானம் செய்வதால் உடலில் புதிய செல்கள் உருவாகி அவர்களின் உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு இரத்த மையங்கள் மற்றும் இரத்த தான முகாம்களில் தன்னார்வமாக இரத்த தானம் செய்யலாம்.
இரத்ததான முகாம் :
இரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்கான e- RaktKosh வலைதளத்தில், இரத்ததான முகாம் மற்றும் இரத்த கொடையாளர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் இரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.தானமாக பெறப்படும் ஒரு அலகு இரத்தம் 4 உயிர்களை காப்பாற்றும்.
இரத்த தானம் முதலமைச்சர் வேண்டுகோள்:
இவ்வாறு பிறர் உயிர் காக்க உதவிடும் இரத்தக் கொடையாளர்கள் மற்றும் இரத்த தான முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு அரசு இரத்த மையங்கள் மூலம் 95 விழுக்காடு இரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ இரத்த தானத்தில்,இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வது குறித்து பெருமையடைகிறேன்.
நடப்பு ஆண்டில், தன்னார்வ இரத்ததானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்தி, விலைமதிப்பற்ற உயிர்களை தொடர்ந்து காத்திட, பொதுமக்கள் அனைவரும் மனமுவந்து தன்னார்வ இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
+ There are no comments
Add yours