சில நேரங்களில் தமிழக போலீஸார் சமூக சிந்தனையை மறந்து விடுகிறார்கள் எனவும் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் நேர்மையாக செயல்படுங்கள் எனவும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
மேற்குவங்க மாநில உதய நாள் கொண்டாட்டம் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட மாநில ஆளுநரும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். உதய நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மேற்குவங்க மாநில கலைஞர்களின் அம்மாநில கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கண் கவர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து துணைநிலை ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறும் போது, “தமிழகத்தில் ஏற்பட்ட விஷச்சாராயம் மரணம் என்பது காவல்துறையினர் சில நேரங்களில் சமூக சிந்தனையை மறந்து விடுகிறார்கள் எனக்காட்டுகிறது. இதுதான் அடிப்படை காரணம். இந்த விவகாரத்தில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொள்வதை விட, மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் காவல்துறையினர் நடந்து கொள்ள வேண்டும். விஷ சாராயம் குடிப்பவர்கள் தமக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.” என்றார்.
மேலும், “தற்போது ஏழை எளிய மக்கள்தான் பலியாகி இருக்கிறார்கள். கள்ளசாராயத்தை முழுவதுமாக ஒழிக்க வேண்டும் என்றால் கள்ளச்சாரத்தை காய்ச்சுபவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பது தான் முதல்வர் மற்றும் எனது தனிப்பட்ட எண்ணமும். ஆனால் தனிப்பட்ட கொள்கைகளை எல்லாம் அமல்படுத்த முடியும் என்று நினைக்கவில்லை.” என்று அவர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours