சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நலம் குறித்து முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், அவர், காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை, மணப் பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலையில் புதன் கிழமை சற்று பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தகவலறிந்த முதல்வர் ஸ்டாலின், மருத்துவமனைக்குச் சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கேட்டறிந்தார். அப்போது, பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை கூறும்போது, “ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கெனவே ஃபேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது மூச்சு விடுவதில் திணறல் ஏற்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அனைத்து மருத்துவ உதவிகளும் சிறந்த முறையில் அளிக்கப்படுகின்றன. மருத்துவர்கள் நல்ல முறையில் கவனித்து வருகின்றனர்.
அவர் மீண்டும் குணமடைந்து வருவார். வரும் 9ம் தேதி சட்டப்பேரவை கூட இருக்கிறது. சட்டப்பேரவையில் அவரது குரலைக் கேட்க ஆவலோடு இருக்கிறோம். அவர் மக்கள் பணிக்கு திரும்புவார்” என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரும் மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்தனர்.
+ There are no comments
Add yours