சென்னை: மீன்பிடித் தடைக்காலம் முடிந்த முதல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் காசிமேட்டில் மீன் வாங்க மீன்பிரியர்கள் குவிந்தனர்.
தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட 61 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் கடந்த 14-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அன்று நள்ளிரவே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். சென்னை காசிமேட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்கு புறப்பட்டுச் சென்றன.
மீன்பிடித் தடைக் காலம் முடிந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று காசிமேட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். ஆனால், குறைந்த அளவே மீன்கள் வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து காணப்பட்டது.
இறால் ரூ.500க்கும், சுறா ரூ.700-க்கும், ஷீலா மீன் ரூ.300-க்கும், சின்ன சங்கரா ரூ.400-க்கும், வவ்வால் ரூ.900 முதல் ரூ.1,300-க்கும், கிழங்கா ரூ.500-க்கும், பர்லா ரூ.300-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து, மீனவர்கள் கூறுகையில், ‘‘ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற விசைப் படகுகள் மீண்டும் கரை திரும்ப ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகும். இந்த வாரம் அண்மைக் கடல் பகுதிக்குச் சென்ற படகுகள் மட்டுமே திரும்பி வந்துள்ளன. இதனால், சிறிய மீன்கள் மட்டுமே கிடைத்தன. பெரிய மீன்கள் கிடைக்கவில்லை. அடுத்த வாரம் முதல்பெரிய மீன்களின் வரத்துஅதிகளவில் இருக்கும். அப்போது, மீன்களின் விலை குறையத்தொடங்கும்” என்றனர்.
எனினும், காசிமேட்டில் நேற்று காலை முதலே மீன் வாங்க கூட்டம் குவிந்ததால் வியாபாரம்களைகட்டியது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே சமயம், மீன்களின் விலை குறையாததால் மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
+ There are no comments
Add yours