சுற்றுலா பயணிகள் தவறவிட கூடாத இயற்கையும், எழிலும் ஒருசேர்ந்த அருவிக்கரை.

Spread the love

நாகர்கோவில்: திருவட்டாறு அருகே இயற்கை எழில் கொஞ்சும் அருவிக்கரை பகுதியைச் சுற்றுலா தலமாக மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் அருவிக்கரை உள்ளது. பெருஞ்சாணி அணையிலிருந்து பரளியாற்றில் வெளியேறும் தண்ணீர், பரந்து விரிந்த பாறைகளின் வழியே பாயும் பகுதியே அருவிக்கரை எனப்படுகிறது.

அருவிக்கரையின் மேல்பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு, இடது மற்றும் வலது கரைக்கால்வாய் மூலமாக விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. ஏற்ற இறக்கம் நிறைந்த பாறைகளினூடே பரளியாற்றுத் தண்ணீர் பரிந்து விரிந்து பாய்வதைக் காணும் போதே, மனதை சிலிர்க்க வைக்கிறது.

பரளியாறு சில இடங்களில் 10 அடி ஆழம், மற்றும் 15 அடி ஆழம் கொண்டதாக உள்ளது. ஆற்றையொட்டியுள்ள சப்தமாதர் கோயில் அருகே நெடும்போக்கு கயம் என்ற பகுதி உள்ளது. பெயருக்கு ஏற்றார் போல் இப்பகுதி ஆழம் மிகுந்த பகுதியாகும். சப்தமாதர் கோயில் எதிரில் அருவிக்கரை அருவி உள்ளது. அருவியின் ஒரு ஓரத்தில் கடவுள்களின் சிற்பங்கள் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளன.

கரோனா காலத்தில் திற்பரப்பு அருவி மூடப்பட்டிருந்த நேரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களை மகிழ்வித்தது அருவிக்கரை அருவியும், பரளியாறும்தான். சுற்றுலா பயணிகள் இங்கே வந்து குளித்து மகிழ்ந்தனர்.

அருவிக்கரை பகுதியில் உள்ள பூங்காவில் கட்டப்பட்டு 3 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு மேற்குத்தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் மூலமாக அருவிக்கரையின் அணையையொட்டி சிறுவர் பூங்கா, பல்வேறு உபகரணங்களுடன் அமைக்கப்பட்டது. இன்றைக்கு அந்த இடம் புல் பூண்டுகள் முளைத்து புதராகக் காட்சி தருகிறது. அங்கு செல்லவே முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. மேலும் விளயாட்டு உபகரணங்களும் சேதமடைந்துள்ளன.

அதே திட்டத்தில் அருவிக்கரையில் சுற்றுலா வருபவர்கள் பயன்படுத்த வாங்கப்பட்டிருந்த பைபர் படகுகளும் இன்று காணாமல் போய்விட்டன. இந்த இடத்தை அவ்வப்போது குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகிறார்கள் என்பதை அப்பகுதியில் குவிந்து கிடக்கும் மதுபாட்டில்களும், பிளாஸ்டிக் கப்புகளும் சொல்லாமல் சொல்கின்றன.

கேரளாவில் இன்று பிரபலமாக இருக்கும் வேளி உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் ஒரு காலத்தில் வெறும் பொட்டல்காடாக இருந்தவையே. அங்குள்ள அரசின் முயற்சியால் பல்வேறு திட்ட பணிகள் மேற்கொண்டதால் அங்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிரித்து அரசுக்கு பெரும் வருவாயைத் தந்து கொண்டிருக்கிறது.

அதுபோல் அருவிக்கரை அருவியில் பொதுமக்கள் சென்று வர பாதை வசதி, அருவியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாத்தூர் தொட்டிப்பாலத்தின் கீழ் பகுதியில் ஓடும் ஆற்றில் இருந்து சப்தமாதர் கோயில் வரையுள்ள பகுதியில் ரோப்கார் வசதி போன்றவை செய்யப்படுமானால் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக இது மாறி விடும். இதற்கு சுற்றுலாத்துறை, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அருவியின் மேல் பகுதியில் பூங்காவையொட்டி 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட 2 கழிவறைகள் திறக்கப்படாமல் உள்ளன. அதுபோல் புதர் மண்டிக்கிடக்கும் அருவிக்கரை பூங்காவையும், அங்கு பயனின்றி கிடக்கும் விளையாட்டு உபகரணங்களையும் சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours