சு.வெங்கடேசன் எம்.பி, தனது எக்ஸ் தள பக்கத்தில், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிக்கான கால வரையறை திட்டத்தை (Bar chart) தாருங்கள் எனக் கேட்டதற்கு “அதே வாழைப்பழந்தான் இது” என்பது போன்று பதில் சொல்லியுள்ளார் ஒன்றிய அமைச்சர். விதி 377ல் கேட்கப்பட்ட கேள்விக்கு கூட நேர்மையாக பதில் தர முடியாத அளவு தோல்வி அடைந்துள்ளது ஒன்றிய அரசு என பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 8, 2023 அன்று அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை என்ற அடிப்படையில் விதி எண் 377 வது பிரிவின் கீழ் மதுரை எய்ம்ஸ் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணை அமைச்சர் டாக்டர் பாரத் பிரவீன் குமார் (DO No. H 11016/04/2023/PMSSY – III / 23.09.2023) பதில் அளித்துள்ளார்.
அந்த பதிலில் நான் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதிலில்லை என்பதுதான் சோகம். மாறாக திரைக்கலைஞர்கள் கவுண்டமணி- செந்தில் நகைச்சுவையைப் போல ” அதே வாழைப்பழந்தான் இது” என்பது போல பதில் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரிவு 377 ன் கீழ் மதுரை எய்ம்ஸ் திட்டத்தில் அளவற்ற தாமதம் இருப்பது பற்றி கேள்வி எழுப்பினேன்.
2015-16 இல் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் திட்டம் 2018 டிசம்பரில் ஐந்தாம் கட்ட எய்ம்ஸ் உருவாக்கமாக 6 புதிய எய்ம்ஸ்களில் ஒன்றாக ஒப்புதலை பெற்றது. 2019 இல் பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் 7 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான பணி துவங்கப்படவே இல்லை. 6, 7, 8. வது கட்டங்களில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் திட்டங்கள் கூட குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
ஆனால் மதுரை எய்ம்ஸ் இன்னும் காகித அளவிலேயே உள்ளன. செப்டம்பர் 2022 இல் முடிந்திருக்க வேண்டிய கட்டுமானப் பணி தற்போது அக்டோபர் 2026 வரை ஆகும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்பவும் என்ன முன்னேற்றம் என தெரியவில்லை. உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது?
கால வரையறை வரைபடத்தை தர இயலுமா? என்பதே பிரிவு 377 இன் கீழ் நான் எழுப்பிய கேள்விகள், அமைச்சர் அளித்துள்ள பதில் நான் கேட்ட எந்த விவரத்தையும் தரவில்லை. மாறாக ஒவ்வொரு முறை கேட்கும் போதும் சொல்கிற கதையையே வரி மாறாமல் ஒப்பித்துள்ளார். புதிய மதுரை எய்ம்ஸ் திட்டம் ரூ 1264 கோடி மதிப்பீட்டில் டிசம்பர் 2018 இல் ஒப்புதலை பெற்றது.
ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேசன் ஏஜென்சி (ஜிகா) கடன் வாயிலாக எய்ம்ஸ் திட்டம் நிறைவேறும் என முடிவு செய்யப்பட்டது. ஜிகா துவக்க நிலை ஆய்வையும் நடத்தி முடித்தது. இதற்கிடையில் 150 படுக்கை கொண்ட தொற்று நோய் பிரிவு ஒன்றை கூடுதலாக திட்டத்தில் இணைத்து மதிப்பீடு 1977.80 கோடியாக உயர்த்தப்பட்டது.
1627.70 கோடி ஜிகா கடனும், மீதம் பட்ஜெட் ஒதுக்கீடு வாயிலாகவும் திட்டச் செலவினம் ஈடு செய்யப்படுமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஜிகா கடன் ஒப்பந்தம் 26.03.2021 அன்று இறுதி செய்யப்பட்டது. நிர்வாக மற்றும் செலவின ஒப்புதல்களும் பெறப்பட்டன. இப்படியாக 92 சதவீத முன் முதலீடு வேலைகள் முடிந்துள்ளன. எல்லைச் சுவரும் எழுப்பப்பட்டுள்ளது.
திட்ட செல் ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், நிர்வாக இணை இயக்குனர், கண்காணிப்பு பொறியாளர், மின் பொறியாளர், கட்டிட பொறியாளர், நிர்வாக அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திட்ட மேலாண்மை ஆலோசகர் நியமிக்கப்பட்டு திட்டத்திற்கான பெரு வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த பதிலில் அமைச்சர் கூறியுள்ளார்.
இது மீண்டும் மீண்டும் கேட்டு புளித்துப் போன கதை- வார்ப்புரு (Template) போல எப்போது கேட்டாலும் 2016 லிருந்து இதே கதையை ஆரம்பித்து விடுகிறார்கள். கடைசியில் சுற்றுச் சுவரை கடக்கவே இல்லை என்பதே கசப்பான உண்மை. உங்கள் திட்டம் என்ன? எத்தனை சதவீத பணி முடிந்துள்ளது? கால வரையறை வரைபடத்தை (Bar Chart) தர இயலுமா? என்ற என் கேள்விகளுக்கு எங்காவது பதில் உள்ளதா? தமிழ்நாட்டிற்கு நீங்கள் இழைக்கும் வஞ்சனையை உங்களின் பதில் வெட்ட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. நாடாளுமன்றத்தில் விதி 377 ல் கேட்கப்பட்ட கேள்விக்கு கால் வரைபடத்தை கூட தரமுடியாத அளவு தோல்வி அடைந்துள்ள ஒரு அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours