இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் , களத்தில் முதலமைச்சர் எனும் திட்டம் கீழ், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தமிழக அரசின் திட்டங்கள், அதன் செயல்முறை பற்றி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டம் முடிந்து அதிகாரிகள் மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அவர் பேசுகையில், அரசு திட்டம் அறிவித்தால் அதனை தொய்வு இல்லாமல் விரைவாக முடிக்க வேண்டும். ஒரு திட்டம் அறிவிக்கப்படும் போதே அந்த திட்டம் முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை ஆய்வு செய்து தான் அறிவிக்கப்படுகிறது.
அப்படி திட்டமிட்டும், அது காலதாமதம் ஆகிவிட்டால் அதனால் திட்டத்திற்கான செலவு அதிகரிக்கும். அந்த திட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்த பொதுமக்கள் பாதிப்படுவர். பணிச்சுமை அதிகரிக்கும். இது கட்டுமான பணிகளுக்கு மட்டுமல்ல, பொதுமக்களின் நலத்திட்டங்களுக்கும் பொருந்தும்.
திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடனுதவி, 100 நாள் வேலை திட்டம், , முதன்மை பட்டதாரிகளுக்கு தொழில் செய்ய உதவி உள்ளிட்டவைற்றை கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
திட்டங்களை செயல்படுத்துவதை விட அதன் வழிகாட்டுதல்களை பயனாளிகள் பெற வழிவகை செய்ய வேண்டும். இன்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளேன். ஒன்று, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தென்சென்னை பகுதியில் செயல்பட்டு வந்த பெருங்குடி சுங்கச்சாவடியில் கட்டண வசூலானது நிறுத்தப்பட்டது . இதனால் அப்பகுதியில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள் பெரும் பயனடைந்தனர்.
அதே போல, நாவலூர் சுங்கசாவடியிலும் கட்டணம் நாளை முதல் வசூலிக்கப்படாது. சென்னையில் பல்வேறு பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் நாவலூர் பகுதியில் போக்குவரத்து அதிகம் இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது என முதல்வர் தெரிவித்தார்.
அடுத்த அறிவிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சிறு அபார்ட்மென்ட் பகுதியில் வசிப்போருக்கு பொதுவாக இருக்கும் மின் மோட்டார் போன்றவைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மின்கட்ட விதிப்படி யூனிட்டுக்கு 8 ரூபாய் வீதம் வசூலிக்கப்படுகிறது . இதனை குறைத்து மின்தூக்கி(லிப்ட்) இல்லா, 10 வீடுகளுக்கு குறைவாக இருக்கும் சிறு குடியிருப்புகளுக்கு பொது மின்கட்டணம் 8 ரூபாயில் இருந்து 5.5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
+ There are no comments
Add yours