சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கை விவரம்: முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ.3.5 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.
சென்னை, திருவல்லிக்கேணி, அருள்மிகு தீர்த்தபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 826/1-ல் 560 சதுரடி பரப்பிலான வணிக மனை மற்றும் சர்வே எண் 826/8 –ல் 2,886 சதுரடி பரப்பிலான குடியிருப்பு மனை என மொத்தம் 3,446 சதுரடி சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்தன.
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் உத்தரவின் படியும், ஆணையரின் சீராய்வு மனு தீர்ப்பின் படியும், இந்த சொத்துகள் உதவி ஆணையர் திரு.கி.பாரதிராஜா முன்னிலையில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் ரூ. 3.5 கோடி ஆகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours