பெரியகுளம்: 6 நாட்களுக்குப் பிறகு அனுமதிக்கப்பட்டுள்ளதாலும் இன்று விடுமுறை தினம் என்பதாலும் கும்பக்கரை அருவியில் ஏராளமானோர் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ.தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானல், வட்டக்கானல், வெள்ளகெவி, பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு அருவியாக கொட்டுகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் கடந்த மாத இறுதியில் நீர்வரத்து சீராக இருந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் நவ.1ல் தடை விதிக்கப்பட்டது.
இதனால் தீபாவளி விடுமுறைக்காக இங்கு ஆர்வமுடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் நவ.2ல் அனுமதிக்கப்பட்டு அடுத்த நாளே தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை (அக்.9) நீர்வரத்து சீராகியதால் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் அனுமதிக்கப்பட்டனர். 6 நாட்களுக்குப் பிறகு அனுமதி அளிக்கப்பட்டதாலும், இன்று (அக்.10) ஞாயிறுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் பலரும் ஆர்வடத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ”எங்கும் இல்லாத அளவுக்கு இங்கு அடிக்கடி தடை விதிக்கப்படுவதால் தூரமான ஊர்களில் இருந்து நம்பி இங்கு வர முடியவில்லை. இருப்பினும் பாதுகாப்பான வசதிகள் அதிகம் உள்ளதால் பயமின்றி குளிக்க முடிகிறது” என்றனர்.
வனத்துறையினர் கூறுகையில், ”செங்குத்தான மலை உச்சியில் இருந்து மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுப்பதால் நீர்ப்பெருக்கை முன்னமே கணிக்க முடிவதில்லை. அருவிக்கு வரும் நீரின் அளவு வனப்பகுதியில் கண்காணிக்கப்பட்டு அருவி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. தற்போது நீர்வரத்து சீராகியதால் சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆர்வமுடன் குளித்து மகிழ்கின்றனர். காலை 8 முதல் மாலை 4 மணி வரை அருவியில் அனுமதிக்கப்படுகிறது. நுழைவுக் கட்டணம் ரூ.30” என்றனர்.
+ There are no comments
Add yours