போக்குவரத்து ஊழியர் வேலைநிறுத்த அறிவிப்பு-ஜூலை 24-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தை.

Spread the love

சென்னை: தொழிலாளர்களின் வேலைநிறுத்த நோட்டீஸ் தொடர்பான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜூலை 24-ம் தேதி நடைபெறும் என தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத் தொகையை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை, ஐஎன்டியுசி, டிடிஎஸ்எஃப் உள்ளிட்ட சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீஸை வழங்கியிருந்தனர்.

இதுதொடர்பான 3-ம் கட்ட சமரசப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து ஜன.9, 10-ம் தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது.

அதன் பின்னர் 4 கட்டபேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், மக்களவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடர்பான அறிவிப்பை தொழிலாளர் தனி இணை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து 27 தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து நிர்வாகங்களுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வேலைநிறுத்த அறிவிப்புகள் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 24-ம் தேதி பிற்பகல் 4 மணியளவில், தொழிலாளர் தனி இணை ஆணையர் முன்னிலையில் நடைபெறவுள்ளது. இதில் கோரிக்கை மனுக்கள் அளித்த தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்களும் கலந்து கொண்டு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours